அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய மாநாடு - மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘கூட்டணியை தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்குங்கள்’’ என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுதவிர, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விரைவில் பெரிய அளவில் மாநாடு நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ஓபிஎஸ், பழனிசாமி அணிகள் தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கவே முடியாது என்று பழனிசாமி தரப்பினர்தெரிவித்துவிட்டனர். இந்தச் சூழலில், அதிமுகவின் நிர்வாகரீதியிலான 75மாவட்டங்கள், அணிகள் என 88 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை ஓபிஎஸ் நியமித்தார். அதோடு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் சமீபத்தில் நடத்தினார்.

இந்நிலையில் பழனிசாமியும், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க காலை 10 மணி முதலே முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் வரத் தொடங்கினர். பழனிசாமி காலை 10.45 மணிக்கு வந்தார். அவருக்கு அவ்வை சண்முகம் சாலையில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைந்தது.

இக்கூட்டத்தில், மேடையில் அமர்ந்திருந்த முக்கிய நிர்வாகிகள்மட்டும் பேச அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம், மாவட்டச் செயலாளர்கள் பலரும் ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, ‘‘பொருட்களில் போலியானவற்றைப் பார்த்திருக்கிறோம் அதேபோல், அரசியலில் போலி ஓபிஎஸ்’’ என விமர்சித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘ஓபிஎஸ்-ஐ மட்டுமல்ல; அவர்பக்கம் போனவர்களையும் மீண்டும் இணைக்கக் கூடாது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். ஓபிஎஸ்-ஐ சட்டப்பேரவை தேர்தலில் திண்டுக்கல்லுக்கு பிரச்சாரம் செய்ய அழைத்தபோது, போடியே போராட்டமாக இருப்பதாக தெரிவித்தார். இவரெல்லாம் தென்மண்டல தலைவரா?’’ என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் பேசினர்.

இறுதியாக, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை உற்சாகமூட்டும் வகையில் பழனிசாமி பேசியதாவது: திமுகவின் ‘பி’ டீம் போன்று ஓபிஎஸ் தரப்பினர் செயல்படுவதால் அவர்களுக்கு இனி கட்சியில் இடமே இல்லை. அவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது அதிமுகவில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பலரும் வந்து இணைந்து வருகின்றனர். இதனால் கட்சி வளர்ந்து வருகிறது. திமுக அரசு மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அதிகளவில் இருந்தது. இந்த ஆதரவை தொடர்ந்து பெருக்க வேண்டும். இதற்காக பல்வேறு போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பூத் கமிட்டி அமைப்பதில் நீங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இதன்மூலம், நமது திறனை நிரூபிக்க முடியும். அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு தேர்தல் பணியாற்றுங்கள்.

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவை இதை செய்யுங்கள்; அதை செய்யுங்கள் என்று எந்த விதத்திலும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. எனவே, கூட்டணியை தேர்தல் நேரத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாவட்டம் வாரியாக தொடங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்ட முடிவில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் மிகப் பெரிய அளவில் மாநில மாநாட்டை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இடம், நாள் குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்டி.ஜெயக்குமார், ‘‘நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசினோம். பல்வேறு அறிவுறுத்தல்களை பழனிசாமி வழங்கியுள்ளார். எங்களுக்கு ஒரு லட்சம் நிர்வாகிகள் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு யார் இருக்கிறார்கள்? எனவே, அவர்கள் எங்களுக்கு பொருட்டே அல்ல’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்