தேசிய அளவில் இருக்கும் ஆதார் அட்டைபோல தமிழகத்தில் 10 இலக்க ‘மக்கள் ஐ.டி.’

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் சேவைகளை பயனாளிகளுக்கு விரைவாக, எளிதாக வழங்கும் நோக்கில், பொதுமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய ‘மக்கள் ஐ.டி.’ வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. தேசிய அளவிலான ஆதார் அட்டை போல, தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்கத்திலான ‘மக்கள் ஐ.டி.’ எண் வழங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கும் வகையிலும், சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே வழியில் வழங்கும் நோக்கிலும், தேசிய அளவில் பிரத்யேக தனி அடையாள எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், ஆளுநர் உரையிலும், அதைத் தொடர்ந்து பட்ஜெட்டிலும் ‘மக்கள் ஐ.டி.’ குறித்த அறிவிப்பு வெளியானது.

அதாவது, மாநில குடும்ப தரவு தளம் (எஸ்ஆர்டிஎச்) உருவாக்கப்பட்டு, அதில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து விவரங்களை பெற்று, பயோ மெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி, அனைத்து துறைகளின் சேவைகளையும் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறையால் அதற்கான அரசாணையும் 2013 நவ.29-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்காக ‘மக்கள்’ என்ற பெயரில் ஒரு செயலி உருவாக்கப்பட்டு அனைத்து மக்களின் ஆதார் விவரங்களையும் ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், மாநில அளவில் குடும்பங்களின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், பொது விநியோக திட்டம், முதியோர் ஓய்வூதியம், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் 100 நாள் வேலை, முதல்வரின் பசுமை வீடு, சுகாதாரத் துறையின் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நலத் துறையின் நலவாரிய உதவித் தொகைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகை மற்றும் சமூகநலத்துறை, வருவாய், பதிவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படை பணிகள் நடந்து வந்தன. இதற்கான அங்கீகாரம் பெற்ற பயனர் முகமையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, ஆதார் அமைப்பிடம் பதிவு செய்தது. தொடர்ந்து, ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்பதன் அடிப்படையில், முகவரி, குடும்ப உறுப்பினரின் பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கான அடிப்படை பணிகளும் தொடங்கப்பட்டன.

அதன்பிறகு, 6 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடந்த நிலையில், கடந்த 2019-ல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை அப்போதைய முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

‘பிறப்பு முதல் இறப்பு வரை அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து மக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப, சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க பயன்படுத்தப்படும் மென்பொருளை தகுந்த முறையில் மாற்றியமைக்க தமிழ்நாடு மின்ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது.

குடிமகன் பெட்டகம்: தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் தனித்துவமான எண் வழங்குவதற்காக ‘குடிமகன் பெட்டகம்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்குரிய அனைத்து ஆவணங்களும் தனித்துவ மக்கள் எண் வாயிலாக மின்னணு முறையில் இந்த பெட்டகத்தை சென்றடையும். அனைவரும் அதில் இருந்து தங்களது சான்றிதழ்கள், ஆவணங்களை பெறலாம்.

அதேபோல, குடிமக்கள் எண்ணை பெற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் நமது அடிப்படை விவரங்களை பதிவு செய்து, கைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி மக்கள்எண் எனப்படும் ‘மக்கள் ஐ.டி.’யை பெறலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘மக்கள் ஐ.டி.’யை பெறுவதற்கான அடிப்படை மென்பொருள் தயாரிப்புக்கான ஒப்பந்தப் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது தொடங்கியுள்ளது.

நிறுவனங்களுக்கு அழைப்பு: மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்படும் மாநில குடும்ப தரவுதளம் மூலம், தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கத்திலான ‘மக்கள் ஐ.டி.’ அளிக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு இந்த எண் வழங்கப்பட உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த, ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழக மின் ஆளுமை முகமை ஒப்பந்தம் கோரியுள்ளது. தரவுகளை சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும், அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசை பொருத்தவரை, ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம், ஆன்லைன் வாயிலாக பயனாளிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்குக்கே தொகைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இது, கருவூலம் மற்றும் கணக்கு துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து திட்ட பயனாளிகளையும் இணைத்து, பயனாளிகள் தங்களுக்கான சேவைகளை பெற ஏற்கெனவே ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘மக்கள் ஐ.டி.’ திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்