தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை: கோவையில் திமுக மீது ஜே.பி.நட்டா தாக்கு

By செய்திப்பிரிவு

கோவை: "திமுகவில் வரும் D என்பது Dynasty. வாரிசு அரசியல், M என்பது Money, திமுகவினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. அதேபோல, K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான்" என்று கோவையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது: "இந்தக் கூட்டத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலில்கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டமாக நான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையான முன்னேற்றத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் பாஜகவைச் சேர்ந்தவன் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.

சீனா, மேற்குலக நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் கரோனா மற்றும் உக்ரைன் போருக்குப் பின்னர், முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இந்தியாவையும், அதனை வழிநடத்திவரும் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பையும் அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

உலகில் பொம்மைகள் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வேதியியல் பொருட்கள் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. மொபைல் போன் உற்பத்தி, இரும்பு ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அரங்கில் இந்தியா ஆட்டோமொபைல் தொழிற்சாலை உற்பத்திகளில் 4-வது இடத்தில் உள்ளது. கோவை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

சாதாரண மக்களுக்குக்கூட இன்று அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு எப்படி அதிகாரம் வழங்குவது என்பதை பாஜகவின் ஆட்சி மூலம் காட்டிக்கொண்டிருக்கிறோம். ஏழை மக்கள் பசியோடு உறங்கக் கூடாது என்பதற்காக, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா எனும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 80 கோடி மக்கள் உணவருந்திவிட்டு படுக்கைக்குச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 5 கிலோ அரிசி, கோதுமை, பருப்பு வழங்கி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பசியாறும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கும் அவாஸ் யோஜனா திட்டம், ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 16 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 40 சதவீத இந்திய மக்கள் தரமான மருத்துவ வசதி பயனடையும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.

46 கோடி மக்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் இந்த அரசு மிகப் பெரிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

பிரதமர் மோடியின வார்த்தைகள் வெற்று கோஷம் அல்ல. அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி என்கிற வார்த்தை வெற்றுக் கூச்சலாக சொல்லப்படவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்தியது. இந்தக் கட்சியில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளனர். பழங்குடியின, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த அரசங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர். பழங்குடியின, பட்டியல் இனத்தைச் சேர்ந்த அதிகமான எம்பிக்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியதன் வாயிலாக, மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு திட்டத்தின் மூலம் தமிழகம் பலன் அடைந்திருக்கிறது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு அதிகமான நிதி, தமிழகத்தில் உள்ள 6 வழிச் சாலைகளை எல்லாம், 8 வழிச் சாலைகளாக மாற்றுவதற்கான அதிகமான நிதி ஒதுக்கீடு, 800 கோடி ரூபாய் செலவில் 8 புதிய ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு அதிக நிதி முதலீட்டில் மத்திய அரசு செய்து வருகிறது.

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவின் முக்கிய நோக்கம், அவர்களது முதல் குடும்பத்தைப் பாதுகாப்பது. முதல் குடும்பம் என்றால், முதல் குடும்பம் மட்டும்தான். அந்த குடும்பத்தில் இருக்கும் அக்கா, தங்கை குறித்தெல்லாம் கவலை இல்லை. திமுகவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money, திமுகவினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. அதேபோல, K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான்.

கொள்ளையடிப்பது மட்டும்தான் திமுகவின் நோக்கம். அவர்கள் மக்களுக்கான ஆட்சி செய்யவில்லை. இந்த தேசம் ஒரு பாதுகாப்பான கைகளில் இருப்பதைப் போல, தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை. பாஜகவைப் பொறுத்தவரை நாடுதான் முதன்மையானது, கட்சி அதற்குபிறகுதான், சுயநலம் என்பது இறுதியானது. அதற்கு முற்றிலும் மாறுபட்டது திமுக" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE