பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர், நரிக்குறவர் உள்ளிட்டோருக்கான திட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை செயல்படுத்திய தமிழக அரசு, ஒபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் உறுதி செய்தது.
மாற்றுத்திறனாளிகள்: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்துக்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1,500-ஐ, காத்திருப்போர் பட்டியலிலுள்ள 9,173 தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென முன்மாதிரி திட்டம் ரூ. 1,709 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மெரினாவில் மரப்பாலம்: சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் பின்பு மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த நவ.27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. இப்பாதையில் பயணித்து மாற்றுத்திறனாளிகள் பலரும் கடலின் அருகே சென்று ரசித்தனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, இந்த மரப்பாலம் கடுமையாக சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பெண்கள்: திமுக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் புதுமைப் பெண் திட்டமும், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் டிச.26-ம் தேதி வரை, 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் சேர மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. கல்லூரிகளின் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவிகளின் அனைத்து விவரங்களும் கல்வி அலுவலர்கள் மூலமாகவே சரிபார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் சேர 1.14 லட்சம் முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவை ஆய்வு செய்யப்பட்ட பின்னர், தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.1000 அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். தற்போது கல்லூரிகளில் படித்து வரும் 2,3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை 1.16 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது.
மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் 80 லட்சம் முறை கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு மகளிர் பயனடைந்திருக்கிறார்கள். 2,935 திருநங்கைகள் பயனடைந்துள்ளார்கள். 50,361 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை எப்போது? - திமுக ஆட்சிக்கு வந்ததும், அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. இதனால், இந்த திட்டம் மக்கள் மத்தியில் பேசுபொருளானது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தத் திட்டம் குறித்து அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், இந்தப் பிரச்சினையை எதிர்கட்சிகள் தொடர்ந்து பேசி வந்தன. அதேபோல் மகளிர் மத்தியிலும், இந்த திட்டம் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பாகவே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதேவேளையில், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நரிக்குறவர் நலன்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு, பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்களின் தேவைகளைக் கண்டறிந்து தேவைக்கேற்ப தனிநபர் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது கட்டமைப்பு வசதிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் மூலமாக, அனைத்து மாவட்டங்களிலும் 4,859 கான்கிரீட் வீடுகள், 3563 கழிப்பறை வசதிகள், 5741 வீட்டுக்கான குடிநீர் இணைப்புகள், 817 மின் இணைப்புகள், 9632 வீட்டு மனைப்பட்டாக்கள், 23,836 வாக்காளர் அட்டைகள், 11,387 குடும்ப அட்டைகள், 32,045 சாதி சான்றிதழ்கள் 13832 நலவாரிய அட்டைகள், 728 மாற்றுத்திறனாளி அட்டைகள், 4,444 முதியோர் ஓய்வூதியம், 596 மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், 353 கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், 1715 விதவை ஓய்வூதியம், 65 திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம், 6978 மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், 26,176 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டைகளும் மற்றும் 3149 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்புடைய துறைகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அண்மையில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். மேலும், திமுக ஆட்சிக் காலத்தில்தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக ஆக்கியது. பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும், இந்த 18 விழுக்காடில் பழங்குடியினருக்கு தனியாக 1 விழுக்காடு வழங்கி, முழுமையாக 18 விழுக்காடும் பட்டியலினத்தவர்களுக்கு கிடைக்கச் செய்து இன்றைய 69 விழுக்காட்டைக் கொண்டுவந்தது.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 விழுக்காடாக பிரித்து, மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப் பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது. அருந்ததியினருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது. இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பிரதமர் வி.பி.சிங் மூலமாக வலியுறுத்தி பெறப்பட்டது.
மத்திய அரசுப் பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மாநிலங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கும் 15 சதவீதம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளங்கலை இடங்களிலும், 50 சதவீத முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 27-ம் தேதி அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவக்கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் 2021-22 ஆம் கல்வியாண்டில் இருந்து மொத்தம் 4,000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago