சென்னை: கற்பனைக் கதைகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்றுத் திரிபுதான். எனவே பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த மாநாட்டில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள். இப்போது நடக்கும் இந்த மாநாட்டில், நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
இந்திய வரலாற்று காங்கிரசின் 81-ஆவது அமர்வை நடத்துவதற்கு, தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்கு, நான் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடிய அனைவரையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று அமைப்பானது, 87 ஆண்டுகளைக் கடந்தும், வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறது. எந்த அமைப்பாக இருந்தாலும், அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம்.
தொடர்ச்சியாக இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தவர்களின் ஆர்வத்தால், இது இத்தகைய மாபெரும் வளர்ச்சியையும் - தொடர்ச்சியையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையான வரலாற்றை - அறிவியல்பூர்வமான வரலாற்றை வடித்துத் தருவதுதான் இந்திய வரலாற்று காங்கிரசின் மிக முக்கியக் குறிக்கோளாக அமைந்துள்ளது. குறிப்பாக, மதச்சார்பற்ற - அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறீர்கள். பல தலைமுறைகளாக வரலாற்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் அமைப்பாகவும், வரலாற்று உணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பாகவும் இது விளங்கிக் கொண்டிருக்கிறது.
» ’அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்’ - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேச்சு
'தத்துவ ஞானிகள் இதுவரை, உலகத்தைப் பற்றி, பல்வேறு முறைகளில் விளக்கம் சொல்லி வந்தார்கள். ஆனால் நாம், எப்படி அதை மாற்றி அமைப்பது என்று நினைப்பவர்கள்" – என்றார் பொதுவுடைமை ஆசான் காரல் மார்க்ஸ். இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் என்பது, வரலாற்று மாற்றத்திற்கு, சிந்தனை மாற்றத்திற்கு, அடித்தளம் அமைக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
D.D.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஏ.எல்.பாஷம், ராகுல் சாங்கிருத்தியாயன், தேவி பிரசாத், கே.பி.ஜெய்ஸ்வால் ஆகிய மிக மூத்த வரலாற்றாசிரியர்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இர்பான் அபீப் ஆகியோர் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
இன்றைய காலத்தின் தேவை என்பது வரலாற்று உணர்வை ஊட்டுதல், அறிவியல் பார்வையை உருவாக்குதல். வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்.
கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது.
இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்.
இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 1994-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்" – என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி – மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்.
தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல! அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம். இங்கே அமைச்சர் தங்கம் தென்னரசு மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
கீழடி,அழகன்குளம்,கொற்கை,சிவகளை,ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,மயிலாடும்பாறை,கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வுகளைத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் - பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்கிறோம்.
உலகளாவிய நிறுவனங்களின் பரிசீலனைக்கு எங்களது கண்டுபிடிப்புகளை அனுப்பி வைத்துக் கேட்கிறோம். இந்த அகழாய்வு முடிவுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்துள்ளேன்.கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.
பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றைப் பற்றிய பெருமிதங்கள்!இத்தகைய வரலாற்று உணர்வை - உண்மையான வரலாற்றை - ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். தமிழினத்தின் - தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
வரலாறு அரசர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, வெற்றி பராக்கிரமங்கள் பற்றிய ஆவணமாக மட்டும் இருக்கக் கூடாது. அது அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் பார்வை.
திராவிட கட்டடக்கலையினை பறைசாற்றும் வானுயரக் கோவில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் “ஆதன்” என்றும் “குவிரன்” என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்.
தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க, இளங்கலை பட்டப்படிப்பை சென்னை கிறித்துவக் கல்லூரி வழங்குகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் வரலாற்றுத் துறை, இந்த அமர்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, வரலாற்றைப் படிப்போம், மீண்டும் சொல்லுகிறேன் வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago