மாவட்டங்கள் வாரியாக குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் - நவீன முறையில் குற்றங்களைத் தடுக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வரின் தகவல் பலகை தரவுகள் வாயிலாக, மாவட்ட வாரியாக குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில், சாதி, வசிப்பிடம், வருவாய், வாரிசு போன்ற சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை அடுத்த ஒரு மாதத்துக்குள் வழங்கி, அந்த விவரங்களை தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் பட்டா மாறுதல்களில் தாமதங்கள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்த முதல்வர், அலுவலர்களுக்கு இதுகுறித்து தக்க அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை பணிகளை ஆய்வு செய்த முதல்வர், வேலூர், தருமபுரி, மதுரை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை துரிதப்படுத்துமாறும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

போதுமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும், பேருந்து நிலையங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட வாரியாக குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து, நிலுவை வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், நவீன முறைகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகர் பி.டபிள்யூ.சி.டேவிதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்கள் முன், துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது, முதல்வரின் தகவல் பலகையில் பல்வேறு துறைகள் தங்கள் தரவுகளை பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை விரைவாகப் பதிவேற்றம் செய்யுமாறு முதல்வர்உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE