அகத்தியர் பிறந்த மார்கழி ஆயில்ய நட்சத்திர நாளான ஜன.9-ல் தேசிய சித்தா தினம் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சித்த மருத்துவ முறை உணவு என்ற கருப்பொருளுடன் 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் வரும் ஜன.9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சியில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதனால், ஆண்டுதோறும் இந்த நாள் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், 2023 ஜன.9-ம் தேதி மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திர நாளில் 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட உள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து, ஜன.9-ம் தேதி திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. 8-ம் தேதி 2,000 மாணவர்களின் ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

முந்தைய கரோனா அலைகளின்போது, ​​பெரிதும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் மருத்துவ முறையாக சித்தா நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சித்தா தின கொண்டாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுகிறது. ‘உணவே மருந்து, மருந்தே உணவே’ என்ற கொள்கையின் அடிப்படையில் வாழும் சித்த மருத்துவ முறை சிறந்த ஆரோக்கியத்துக்கு, பாரம்பரிய உணவுகள், தானியங்களை பயன்படுத்துவதை நிலைநிறுத்துகிறது. ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சித்த மருத்துவ முறை உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்’ என்பதே இந்த 6-வது சித்தாதின கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE