புதுடெல்லி: "அரசியலமைப்புச் சட்டத்துக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலலை இல்லை. நான் அதற்காகவே இந்த யாத்திரைக்கு வந்திருக்கிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நூறு நாட்களுக்கும் மேலாக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக்கிழமை டெல்லி வந்தடைந்தது. டெல்லி செங்கோட்டை பகுதியில் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது: "இந்த யாத்திரைக்கு நான் கமல்ஹாசனாக வந்திருக்கிறேன். தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியும் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக அவரை நான் என்னுடைய சகோதரராக ஏற்றுக்கொண்டேன் என்றில்லை.
இது இந்தியாவின் இரண்டு கொள்ளுப்பேரன்கள் கலந்து நடத்தும் யாத்திரை. நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி, நான் காந்தியின் கொள்ளுப்பேரன். இதுதான் எங்கள் இருவருக்குமான உறவு. இந்தியாவில் அதுபோல நிறைய கொள்ளுப்பேரன்கள் உள்ளனர். அதனால், கட்சி உள்ளிட்ட பாகுபாடுகள் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வருவோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.
எனது அரசியல் வாழ்க்கை நாட்டுக்காகத் தொடங்கியது, எனக்காக உருவானது அல்ல. நான் இங்கு வந்ததற்கு காரணம், கண்ணாடி முன் நின்று என்னை நானே பார்த்துக் கேட்டுக் கொள்வேன். நாட்டிற்காக களமிறங்க வேண்டிய நேரம் இதுதானா? என்று. அதற்கான பதில் ராகுல் காந்தியிடம் இருந்தது.
நாட்டுக்கான நேரம் வந்துவிட்டதால், நான் இங்கு வந்தேன். நான் நினைக்கும் ஒற்றுமை என்னவென்றால், மாநிலங்கள்தான். நான் இணைக்க விரும்புவது பிரகாசமான எதிர்காலம் கொண்ட நமது தேசத்தின் கடந்தகால புகழ்வாய்ந்த மரபுகளைத்தான். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
இந்த யாத்திரையில் பங்கேற்றவுடன் பலரும் கூட்டணி குறித்து கேட்கின்றனர். அது வேறு விஷயம். நான் இந்தியன் என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். இது ஏதோ ஐந்தாண்டு திட்டத்துக்கானது அல்ல, அதற்கும் அப்பாற்பட்ட தலைமுறைகளுக்கானது. அதனால்தான் நம் நாடு என்று அழைக்கிறோம்.
எனவேதான், எனது மாநிலத்திற்கும், மக்களுக்கும், எனது கட்சியினருக்கும் நான் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். நாட்டிற்கான பிரச்சினைகளுக்காக வரும்போது கட்சிக் கொடிகளின் நிறங்களை மறந்துவிட வேண்டும். தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்கள் மட்டுமே நினைவில் வரவேண்டும். எனவேதான் நான் இங்கு வந்தேன்.
அவ்வாறான பணியைச் செய்துள்ள ராகுல் காந்தியை நான் மதிக்கிறேன். இதை செய்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். உங்களைப் போலவே இந்த யாத்திரை முழுவதும் நானும் மகிழ்ச்சிக் கொள்கிறேன். நான் மீண்டும் சந்திப்போம், பேசுவோம். ஜெய்ஹிந்த்" என்று கமல்ஹாசன் பேசினார்.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 100 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இன்று (டிச.24) கலந்து கொண்டு ராகுல் காந்தியோடு நடந்து சென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago