கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய ஏரிகள் வெட்டும் திட்டம்: காரைக்கால் மாவட்ட விவசாய, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?

By வீ.தமிழன்பன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரே நெற்களஞ்சியம் காரைக்கால் மாவட்டம் மட்டுமே. இம்மாவட்டம் புவியியல் ரீதியாக தலைநகரமான புதுச்சேரியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் தமிழகப் பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை ஒட்டியுள்ளது.

தமிழகத்தைச் சார்ந்தே…

இதனால் பல்வேறு நிலைகளில் காரைக்கால் மாவட்டம் தமிழகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைப் பெறுவது தமிழகத்துக்கு ஒருவிதமான பிரச்சினை என்றால், அதுவே புதுச்சேரிக்கு இரு விதமான பிரச்சினையாக உள்ளது. சட்டப்படி, புதுச்சேரி மாநிலத்துக்கு கர்நாடகம் 6 டிஎம்சி காவிரி நீரை வழங்க வேண்டும். ஆனால், கர்நாடகம் அவ்வாறு திறந்துவிடுவதில்லை.

இந்நிலையில், கர்நாடகம் தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவு காவிரி நீரைத் திறந்துவிடும்போது, அதில் புதுச்சேரி மாநிலத்துக்குரிய குறிப்பிட்ட சதவீத அளவு நீரை தமிழகத்திடமிருந்து பெறவேண்டியது புதுச்சேரி அரசுக்கு மற்றொரு சுமையாக உள்ளது. இதனால், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கர்நாடக அரசையும், தமிழக அரசையும் தண்ணீருக்காக எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பது வாடிக்கையாகிவிட்டது.

சாகுபடி பரப்பளவு குறைந்தது

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது. இதில், பெரும்பகுதி மாவட்டத்தில் ஓடக்கூடிய திருமலைராஜன் ஆறு, வாஞ்சியாறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு ஆகிய 5 ஆறுகளில் வரக்கூடிய நீரை நம்பியே சாகுபடி செய்யப்பட்டது. பின்னர், சாகுபடி நிலப்பரப்பு படிப்படியாகக் குறைந்து தற்போது 6 ஆயிரம் ஹெக்டேர் மட்டுமே சாகுபடி நிலப் பரப்பாக உள்ளது. அதிலும் சுமார் 5,200 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுமார் 85 சதவீதம் ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பியும், 15 சதவீதம் ஆழ்குழாய்ப் பாசனத்தைக் கொண்டும் சாகுபடி செய்யப்படுகிறது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக உரிய காலத்தில் காவிரி நீர் கிடைக்கப் பெறாததாலும், வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போவதாலும் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் கடலோரப் பகுதி என்பதால் குடிநீர்ப் பிரச்சினையும் நிலவி வருகிறது.

எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்று அஞ்சப்படுகிறது. சில பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர் நீராகி வருவதும், சில இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் கிடைக்காமல் போவதும் பெரும் பிரச்சினையாகி வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம், குடிநீர் இவ்விரு பிரச்சினைகளையும் ஓரளவுக்கேனும் சமாளிக்கும் வகையில் அல்லது இன்னும் சில காலத்துக்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் புதிய ஏரிகளை வெட்ட வேண்டும், ஏற்கெனவே இருக்கும் குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை முறையாகப் பராமரித்து, அதில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்பதே தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் இயற்கையாக உருவான ஏரிகள் என்பதே இல்லை. விவசாயிகளின் வலியுறுத்தலால் திருநள்ளாறு அருகே நல்லம்பல் பகுதியிலும், நிரவி அருகே படுதார்க்கொல்லை மற்றும் அகரமாங்குடி பகுதிகளிலும் ஏரிகள் வெட்டப்பட்டன. இவற்றில் நல்லம்பல் ஏரி மட்டுமே முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அதுவும் உரிய பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. பின்னர் தொடங்கப்பட்ட மற்ற ஏரிகள் வெட்டும் பணி இன்னும் முழுமையடையவில்லை.

காரைக்கால் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய ஏரிகள் வெட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதும், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாகியுள்ளது.

பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்க வேண்டும்

அகில இந்திய விவசாயிகள் சங்க காரை வட்ட செயலர் எஸ்.தமீம் கூறியது:

“இப்பகுதியில் பருவமழையை நம்பித்தான் விவசாயம் பெரிதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரைக்காலில் கோட்டுச்சேரி கொம்யூன் பகுதியில்தான் குடிப்பதற்கு தகுந்த குடிநீர் கிடைக்கிறது. இந்த கொம்யூன் பகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடியில் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை. இப்பகுதியில் இன்னும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டால் அது விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மாவட்டத்தில் பழுதடைந்துள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை உடனடியாக சீரமைப்பதுடன் தேவையான இடங்களில் புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைப்பதும் அவசியம்” என்றார்.

அரசு சிறப்பு கவனம் செலுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் கூறியது:

காரைக்கால் மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்பற்ற குடிநீரையே பருகி வருகின்றனர். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாவது போன்ற பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். 1992-ம் ஆண்டு இப்பகுதியில் சேகரித்த குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்திய மத்திய நீர் வளத் துறை இந்த நீரைக் குடிப்பது பாதிப்புகளை உண்டாக்கும் என்று கூறியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் புதுவை அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீர் சேமிப்புத் திட்டங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்கி பணிகளை முடுக்கிவிட வேண்டும். அப்படிச் செய்தால் விவசாயம், குடிநீர் தேவைக்கு அது உதவும்.

நல்லம்பல் ஏரியை இன்னும் ஆழப்படுத்த வேண்டும். படுதார்க்கொல்லை, அகரமாங்குடி, போலகம் ஆகிய பகுதிகளில் ஏரிகள் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையடையாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் ஏரிகள் வெட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, புதிய ஏரிகள் வெட்டுவதும், ஏற்கெனவே அரைகுறையாக வெட்டப்பட்டுள்ள ஏரிகளை முழுமையாக வெட்டிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டியதும் அவசியம். அப்போதுதான் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயமும் பாதுகாக்கப்படும். இதனால் மாவட்டத்தின் பொருளாதார நிலையும் வளர்ச்சி அடையும் என்றார்.

காலத்தின் கட்டாயம்

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் மாநில அரசு, புதுச்சேரிக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான பிராந்தியமும், மாநிலத்தின் நெற்களஞ்சியமுமான காரைக்கால் மாவட்டத்தின் விவசாயத்தைப் பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் உரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் காரைக்கால் மாவட்ட மக்கள்.

உவர் நீர் நன்னீராக மாறியது

இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் கூறியது:

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லம்பல் பகுதியில் ஏரி வெட்டப்பட்டது. பின்னர் இதில் படகு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதுவும் முழுமை பெறவில்லை. பின்னர் படுதார்க்கொல்லை பகுதியில் ஒரு ஏரி வெட்டப்பட்டது. அதுவும் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அம்பகரத்தூர், சேத்தூர், தேனூர் ஆகிய இடங்களில் ஏரிகள் வெட்ட கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதுவை அரசு நிர்வாக ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இதுவரை அங்கு பணிகள் தொடங்கப்படவே இல்லை. இப்போது அந்த நிர்வாக ஒப்புதலும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் அண்டூர், கழுகுமேடு உள்ளிட்ட இன்னும் சில இடங்களைக் கண்டறிந்து அங்கும் ஏரிகள் வெட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அவ்வாறு செய்தால் விவசாயத்துக்கு உதவும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஏற்கெனவே நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆறுகளின் குறுக்கே கடைமடை அணைகள் கட்டப்பட்டன. அதனால் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டதாலும், ஆற்று நீர் சில அடி உயரத்துக்குத் தேக்கப்பட்டதாலும் அந்தப் பகுதிகளில் இருந்த குடிநீர் பம்புகள், கிணறுகளில் இருந்த உவர் நீர் மெல்ல மெல்ல நன்னீராக மாறியது. விவசாயத்துக்கும் பயன்பட்டது. மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்களில் ஏரிகள் வெட்டுவதன் மூலம் பல பகுதிகளிலும் இதுபோன்ற மாற்றம் நிகழும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்