4,684 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் - நடவடிக்கையை தொடங்கியது கூட்டுறவுத் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் 2018-ல் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம்பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டத் தேர்தலில் தேர்வான சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023 ஏப்ரலில் முடிவடைகிறது. இதையடுத்து, தேர்தல்நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018 மார்ச் 12 முதல் ஆக. 11-ம் தேதி வரை 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அதில், முதல்நிலையில் ஏப்.3-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வரும் 2023 ஏப்.2-ம் தேதி பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

எனவே, பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். சரகம் வாரியாக இந்த விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வரும் 28-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம், சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக சுட்டிக்காட்டி, சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தானாகவே முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE