கிறிஸ்தவ நிறுவனங்களின் கல்வி பங்களிப்பையும், மருத்துவ தொண்டையும் யாரும் மறக்க முடியாது: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் திமுக அரசு" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.23) கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் பேசியது: "திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.மனிதநேயத்தை வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை.தந்தை பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவோடு, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களோடு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து நின்றார்.

அண்மையிலே நாம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே, அந்த பேராசிரியர் பெருந்தகை அவர்கள், வள்ளலார் விழாக்களில் பங்கேற்று ஆற்றியிருக்கக்கூடிய உரைகளை யாரும் மறக்க முடியாது. ஏன், அன்று முதல் இன்றுவரை பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டவர்கள் எங்களுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுளை வணங்கக்கூடியவர்கள்தான், அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திமுகவின் பார்வையாகப் பேரறிஞர் அண்ணா முன்வைத்து, சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து, சமூகநீதிப் பாதையில் பயணிக்கச் செய்தார்.

திமுகவைப் பொறுத்தவரை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்கிற தத்துவத்தை எடுத்துவைத்த பேரறிஞர் அண்ணா வழியைப் பின்பற்றி இன்றைக்கு திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயேசுநாதராக இருந்தாலும், அண்ணல் முகமது நபியாக இருந்தாலும், அருட்பிரகாச வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும், அவர்களின் துன்பங்களைக் களைந்திட வேண்டும் என்பதையே அருள்நெறியாக முன்வைத்தார்கள்.

சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி, வெற்றிகரமாக அதனை செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சி தான் உங்கள் ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனை துடைக்கவேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய நோக்கம்."ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதை ஒப்புக்கொள்வதே ஆத்திகமாம். ஒருவரையொருவர் ஏமாற்றாமல் இருப்பதே நாத்திகமாம்.நன்றே சொல்வேன் நமக்குக் கடவுள் நலிந்தோர் சிரிப்பில்தான்"-என்றார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஏழை எளிய மக்களை ஏமாற்றிட யார் நினைத்தாலும் அதனை அனுமதிக்காமல், எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நலிந்தோர் வாழ்வு நிமிர்ந்திட, அவர்கள் மகிழும்போது, கடவுளின் புன்னகையை நம்மால் கண்டுணர முடியும். அந்தப் புன்னகை எல்லாத் தரப்பிலும் வெளிப்பட வேண்டும் என்ற இலக்குடன்தான் திராவிட மாடல் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சி அமைவதற்கு முன்பே நம்முடைய கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாக்களில் நான் பங்கெடுத்து வருகிறேன். நம்முடைய மாவட்ட செயலாளர் இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நம்முடைய செயல்வீரர் சேகர்பாபு கிறிஸ்துமஸ் விழா என்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. ஆகவே நடைபெறுகிற அந்த விழாக்கள் எல்லாம் ஏதோ கொளத்தூர் தொகுதிக்கு அதை எடுத்துக்காட்டாமல், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எடுத்துக்காட்டாகக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நலிந்தோருக்கான நல உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வரக்கூடிய நல்வாய்ப்பை நான் பெற்று வருகிறேன்.

தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய உடைமைகளைப் பெறுவது இன்பம். அத்தகைய உடைமைகளைப் பெற இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு அவற்றை வழங்கி மகிழ்வதுதான் பேரின்பம். அதுதான், திருநாள்-திருவிழா என்பதற்கு உண்மையான பொருளாக அமைந்திட முடியும். இந்த கிறிஸ்துமஸ் விழா அப்படிப்பட்ட உண்மையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய விழாவாக அமைந்துள்ளது.ஒருநாள் மகிழ்ச்சி என்பதுபோல, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அமையவேண்டும். அதற்கு தொலைநோக்குத் திட்டங்கள் அமல்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய புரட்சியைப்பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்கள். கிறிஸ்துவ நிறுவனங்கள் செய்துள்ள பங்களிப்பை நிச்சயமாக கல்வித்துறையைப் பொறுத்தவரையில் எவராலும் மறக்க முடியாது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, இனிய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கின்ற நானும் கிறிஸ்துவ நிறுவனத்தினரின் பள்ளியில்தான் படித்தேன். அதை நினைத்து இப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுபோலவே, மருத்துவத் துறையிலும் கிறிஸ்துவ நிறுவனங்கள் ஆற்றியிருக்கக்கூடிய தொண்டையும் நாம் மறக்க முடியாது. தமிழ்நாட்டில் முன்னோடியாக அமைந்த கிறிஸ்துவ நிறுவனங்களின் மருத்துவமனைகளின் தொடர்ச்சியாக, இன்று இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலமாகத் நம்முடைய தமிழ்நாட்டை மேம்படுத்தி, அரசு மருத்துவமனைகளில் தரமான, விரைவான சிகிச்சையைக் கிடைக்கச் செய்திருக்கிறோம். ஒரு காலத்தில், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தேடிச் சென்று நோய்க்கான மருந்துகள், தடுப்பு மருந்துகளை வழங்கிய கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள் இருந்தன.

இன்று, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்து சாதனை படைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த முன்னோடி மொழியான தமிழ் மொழி தனித்தியங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதற்கு ஏராளமான சான்றுகள் வழங்கியும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பங்காற்றிய வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல், போன்றவர்களின் பங்களிப்பும் இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைத் தொடர்ந்து தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வலியுறுத்தியவர் யார் என்று கேட்டால், பரிதிமாற் கலைஞர். அதனை நிறைவேற்றிக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

மதத்தால் வெவ்வேறானவராக இருந்தாலும், மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள். அந்த உணர்வுடன், மதநல்லிணக்கத்தை முன்வைத்து, ஒற்றுமையுடன் பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும். அடுத்து வரக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டும் ஒளிமயமாகத் திகழட்டும் என உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்