சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு இருக்குமா?

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் கரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால் புத்தாண்டுக் கொண்டாத்திற்கு வழக்கமான கட்டுப்பாடுதான் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இதுவரை 38 ஆயிரத்து 49 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக, 2021, 2022ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சாலையில் சுற்றுவதும், பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டன.

தற்போது தமிழகத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், எவ்வித கரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல், புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், இரண்டு ஆண்டுக்கு பின், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், ஹோட்டல் போன்ற உள் அரங்குகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் இன்றி புத்தாண்டு கொண்டாடவும் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சீனாவில் பரவி வரும் ஒமைக்ரானின் உருமாறிய ‘பிஎப்7’ வைரஸ் பாதிப்பும் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழக்கமான கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்படும்.

ஹோட்டல், கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அதிகபட்சம் நள்ளிரவு 1 மணி வரை அனுமதி போன்ற வழக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதுகுறித்து விரிவான ஆலோசனைக்கு பின், என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது அதிகாரபூர்வமாக அடுத்த வாரத்தில் வெளியாகும்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE