மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை: மேயர் பிரியா

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளின்படி சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

281 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் ஒரு நடமாடும் மருத்துவ வாகனம் வழங்கப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (டிச.23) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல் தொடர்பான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு மருத்துவ முகாம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக சென்னை ரோட்டரி சங்கம் நடமாடும் மருத்துவ வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த வாகனம் மூலம் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகாம் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பு இல்லை. கரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து வகையிலும் சென்னை மாநகராட்சி தயராக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மேயர் பிரியா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE