சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், 24.12.2022 அன்று இரவு முதல் 25.12.2022 வரை, சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 24.12.2022 அன்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், 24.12.2022 அன்று இரவு முதல் 25.12.2022 வரை சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களின் அருகிலும் சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியர் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்), தேவாலயம், சைதாப்பேட்டை, சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களின் அருகில் காவல் குழுவினர் மூலம் ஒலி பெருக்கியில் (Public Address system) பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் அறிவுறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் தொடர்ந்து ரோந்து சுற்றி வரவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நபர்கள் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், All Terrain Vehicle (ATV) மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள்
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் விரிவான பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து காவல் ஆளிநர்கள் மூலம் தேவாலயங்களின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- மேலும், முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ANPR மற்றும் CCTV கேமராக்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து தகுந்த ஆதாரத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் அனுப்பவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை மூலம் மேலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுவதுடன், பொதுமக்கள் காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கடைபிடித்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.