அதிமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயின்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," எனது தலைமையிலான அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயின்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்த செயல் திறனற்ற திமுக அரசு, கடந்த 19.12.2022 அன்று அதிமுகவின் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்” என்று நாமகரணம் சூட்டி இந்த அரசின் முதலமைச்சர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.

23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை சுமார் 82 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர். நிதியாக வரப்பெற்றது.

இந்திய நிறுவனச் சட்டம் 2019-ன் படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு விழுக்காடு தொகையினை சமூகப் பொறுப்புச் செயல்பாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்று முறை வகுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் ஏற்படுத்தும் விதமாக, நான் 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணைய தளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கும் விழாவை எளிமையாக துவக்கி வைத்தேன்.

இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டது. இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாகச் செயல்படும் என்றும், அக்கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள் என்று அரசு செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த திமுக அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தையும், இத்திட்டத்திற்காக தனியாக துவக்கப்பட்ட இணையதளத்திற்கும் மூடுவிழா நடத்தியது இந்த அரசு. எனினும் தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், அதிமுக அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, "நம்ம ஸ்கூல்” என்ற தங்கிலீஷில் பெயரை வைத்து இத்திட்டத்தை மீண்டும் துவக்கியுள்ளார் திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர்.

எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு-சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்