தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தார். அப்போது, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து 2 ஆண்டுகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பொங்கல் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கினார். தொடர்ந்து, ரூ.500 வரை ரொக்கம் உயர்த்தப்பட்டது. பின்னர், பச்சரிசி, சர்க்கரையுடன் 2 அடி கரும்பும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில ஆண்டுகள் பொங்கல் பரிசு வழங்கப்படாத நிலையில், முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் பொங்கல் பரிசு ரூ.2,500 வரை உயர்ந்தது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது.

பின்னர், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததால், அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. எனவே, 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொருட்களுக்குப் பதிலாக பரிசுத் தொகையாக ரூ.1,000 வங்கிக் கணக்கு மூலம் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து, வங்கிக் கணக்கு விவரங்களைப் பெறும் பணிகள் நடைபெற்றன. வங்கிக் கணக்கு விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைக்காதவர்களை, கடை ஊழியர்களே செல்போனில் தொடர்புகொண்டு, வங்கிக்கணக்கு விவரங்களைப் பெற்று வந்தனர்.

இதற்கிடையில், பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதைவிட, நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக ரூ.1,000 வழங்கலாம் என்று அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கினர். கடந்த 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் நியாயவிலை கடைகள் மூலம் வழங்குவதுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்: இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் தைப் பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். இதன் மூலம் அரசுக்கு ரூ.2,356.67 கோடி செலவு ஏற்படும். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை ஜனவரி 2-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், அன்றே மாவட்டங்களில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கிவைப்பார்கள். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையிலும் பொங்கல் பரிசு: புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள், பச்சரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, முழு உளுந்து, பயத்தம் பயிறு, முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய், வெல்லம் ஆகிய 10 பொருட்கள் அடங்கிய, ரூ.500 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்