முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை ஏப்ரலில் வெளியிடுவேன்: அண்ணாமலை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: “திமுகவின் அமைச்சர்கள், பினாமிகள் மற்றும் உறவினர்களின் சொத்துப் பட்டியல் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூரில் உள்ள கோவில்வழி பகுதியில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தினர் மத்தியில் பேசிய அவர், "சமீபத்தில் திமுகவினர் அண்ணாமலை ஒரு வாட்ச் கட்டியிருக்கிறார். அந்த வாட்ச்சிற்கு பில் கொடுக்க வேண்டும் என்று கூறினர். நான் சொன்னேன்... பில் கொடுக்கிறேன், அதற்கான தேதி, நேரம் எல்லாம் குறித்துவிட்டேன். அந்த வாட்ச் எங்கிருந்து வாங்கினேன். எவ்வளவு பணம் கொடுத்தேன். அனைத்தையும் ஆதாரத்துடன் கொடுப்பேன்.

இந்தியாவில் மக்கள் எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களைப் பார்த்துதான் கேள்வி கேட்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்திய வரலாற்றில், முதன்முறையாக ஆட்சியில் இருக்கும் திமுக, ஒரு சாமானிய மனிதரை பார்த்து பில் கொடுக்கச் சொல்லி கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை. நான் காவல் துறையில் எப்போது பணியில் சேர்ந்த 2010-ம் ஆண்டு முதல் தற்போது 2022, இந்த 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த அனைத்தையும் பொதுமக்களுக்காக வெளியிடப் போகிறேன்.

தமிழகம் முழுவதும் நான் மேற்கொள்ள இருக்கும் பாதயாத்திரைக்கு முன் இதற்காக ஒரு வெப்சைட்டை உருவாக்கி, எனது வருமானம், செலவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிடப் போகிறேன். இதற்காக ஏற்கெனவே ஒரு குழு பணியைத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, திமுகவின் அமைச்சர்கள், பினாமிகள் மற்றும் உறவினர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறேன். அது ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.

திமுகவின் முதல்வர், அவருடைய குடும்பத்தின் சொத்துகள் என்னென்ன? அந்தச் சொத்துகளை எங்கே வைத்துள்ளனர். நமக்குத் தெரிந்த விவரங்களை வைத்துமட்டும் பார்த்தால், 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது. முதல்வரில் இருந்து ஆரம்பித்து திமுகவில் இருக்கும் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கு தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.

உடனே திமுகவினர், நாங்கள் ஏற்கெனவே சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட்டதாக கூறலாம். தேர்தல் ஆணையத்திடம் என்ன கொடுத்தீர்கள்? தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் கொடுத்துள்ள சொத்து விவரங்களில் தன்னிடம் சொந்தமாக காரே இல்லை என்று கூறியிருக்கிறார். எந்தக் கார் என்று நாங்கள் சொல்கிறோம்.

முதல்வர் மகன் லெக்சஸ் கார் வாங்கி, வரி கட்டாமல் இந்தியாவிற்குள் கொண்டுவந்த போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தனர். முதல்வருக்கும், அவரது மகனுக்கு எதிராக சிபிஐயில் கொடுத்த சாட்சி ஆவணங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் திமுக புள்ளிகள் இந்தோனேசியாவில் சுரங்கங்கள் வைத்துள்ளனர். ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக ஒரு துறைமுகம் வைத்துள்ளார். தமிழகத்தில் இதுகுறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. லஞ்சத்தை ஒழிக்காமல் அடுத்தப்படி எடுத்துவைப்பதில் பயனுமே இல்லை" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE