புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்.பியான கே.கல்யாணசுந்தரம் தனது கன்னி உரை ஆற்றினார். அப்போது அவர், தனது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமலாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கல்யாணசுந்தரம் பேசியதாவது: ''பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாக ஒரு போலி வேடம் இட்டு மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து, திரும்பப் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட உரங்களின் விலை, பொட்டாஷ், யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் போன்றவைகளின் விலைகள் பத்து மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் விவசாயிகளின் உற்பத்தி பொருளான நெல் விலையோ, கோதுமை விலையோ, கரும்பின் விலையோ அல்லது சிறு தானியங்களின் விலையோ அந்த அளவுக்கு உயரவில்லை.
இதற்கு ஈடு கட்டும் அளவிற்கு வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடும் துன்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அடித்தட்டு மக்களுக்கு உஜாலா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் எரிவாயு அளிப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு பக்கத்தில் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு சிலிண்டர் விலை இப்பொழுது 1250 ரூபாயாக உயர்ந்து விட்டது. இப்பொழுது பொதுமக்களுக்கு உஜாலா திட்டம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருக்கும்போது அனைவருக்கும் பயன்படும் வகையில் செல்லிடப் பேசி வசதியை அடித்தட்டு மக்கள் பயன்பெறும் ஒரு சாதனையை படைத்தது. ஆனால் இந்த அரசு வந்த நாட்களாக பிஎஸ்என்எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 50ஜி வழங்கவில்லை. இரண்டையும் தனியாருக்கு வழங்கியது. ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது எந்தவொரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பணிபுரிவதில்லை. பிஎஸ்என்எல். மட்டுமே தனது பணியை செம்மையாக செய்து வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
கும்பமேளா: தென்னிந்தியாவின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமகம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அடுத்த மகாமகம் 2028-ல் நடைபெற உள்ளது. பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்திட தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
சோழர்கால ஆலயங்கள்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து ஆலயங்களை மாநில அரசு புதுப்பித்து வருகின்றது இதற்கும் ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி ஆவண செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்: நான் சார்ந்த தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான ரயில்வே பாதை விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதேபோல் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் பாதையை புதுப்பிக்கும் கோரிக்கையும் சென்னை-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகிறது.
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு: இதனை உடனே முடிக்க வேண்டுமென இந்த மன்றத்தில் நான் வலியுறுத்துகிறேன். மேலும் ஒன்றிய அரசு நிறுவனங்களான ரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உங்கள் மூலமாக வைக்கின்றோம்.
கைவினைப் பொருட்கள்: தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு தொழில் துவங்குவது சாத்தியம் இல்லை.
மாநில அரசிற்கு உதவி: அதனால் விவசாயம் சார்ந்த மாடு வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், மீன் வளர்த்தல், உணவுப் பொருள்களை பதப்படுத்துதல், நெல் அரவை தொழிற்சாலை, கடலை, தேங்காய், எள்ளு என்னை எடுக்கும் தொழிற்சாலைகள் போன்ற தொழில்களுக்கு மாநில அரசிற்கு உதவியாக ஒன்றிய அரசு இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சிஎஸ்ஆர் நிதி: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இந்த தொழில் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் பெற்று தமிழ்நாட்டிற்கு சிஎஸ்ஆர். நிதிகள் மூலமாக சரியான விகிதத்தில் பங்களிக்கப்படவில்லை. சிஎஸ்ஆர். திட்டத்தை நிறைவேற்றும்போது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டசி(எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்) குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் இந்தப் பணிகளை ஆற்ற வேண்டும்.
கரும்பு நிதி: பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின் கலால் வரி எடுக்கப்பட்டதால் கரும்பு வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டு விட்டது. நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிர் செய்யப்படுவதால் நெல்லை போல் கரும்பு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கிட கரும்பு வளர்ச்சி நிதியை தொடர வேண்டும்.
கரும்பாலை விவகாரம்: தஞ்சை மாவட்டத்தில் தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டு விட்டதால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டதை தவிர்க்கும் பொருட்டு மூடப்பட்ட கரும்பாலைகளை திறப்பதற்கு மாநில அரசோடு கலந்து பேசி ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.
டிஜிட்டல் கிராமங்கள்: மேலும், தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களை டிஜிட்டல் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருநள்ளாறு ஆன்மீக பூங்காவை போல் கும்பகோணத்தில் ஒரு ஆன்மீக பூங்கா அமைக்கவேண்டும். என்னுடைய இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடியாக இதனை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு வலியுறுத்துகின்றேன்” என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago