ஈமப்பேழையின் ஊன்று கால்... - திருப்பத்தூரில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத் தடயங்கள் கண்டெடுப்பு

By ந.சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் துாய நெஞ்சக் கல்லுாரிப் பேராசிரியர் முனைவர். பிரபு தலைமையில் தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன் மற்றும் உதவிப்பேராசிரியர் சுனில், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகிலுள்ள ‘சுடுகாட்டூர்’ என்ற கிராமத்தில், கள ஆய்வு நடத்தியபோது, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்களைக் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர். பிரபு கூறியது: ‘‘தமிழகத்தின் தொன்மையினை விளக்கும் சான்றுகளாகத் திகழ்பவை தொல்லியல் சின்னங்கள் ஆகும். இவை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள இப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது சுடுகாட்டூர் மாரியம்மன் கோயில் எதிரே விவசாய நிலத்தில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலத்தில், விவசாயம் மேற்கொண்டபோது பல மண் ஓடுகளும், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. அவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அவை கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள் என்பதை அறிய முடிந்தது. சொல்லப்போனால் பெருக்கற்காலத்தோடு தொடர்புடைய ‘ஈமப்பேழை’யின் ஊன்று கால் ஒன்றும் கிடைத்தது.

ஈமப்பேழைகள் என்பவை பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்திட பயன்படுத்தப்பட்டவையாகும். இவை சுடு மண்ணால் செய்யப்படுபவை. இவை பெருங்கற்கால சின்னங்களான, கல்வட்டம் மற்றும் கற்பதுக்கை ஆகியவற்றின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். இவை செவ்வக வடிவில் குளியல் தொட்டி போன்று (Bath tub) காணப்படும். உயிரிழந்தவர்களின் உடலை உள்ளே வைத்து மூடி போன்ற அமைப்பைக் கொண்டு மேற்புறம் மூடப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் 2 அல்லது 3 வரிசைகளில் ஊன்று கால்கள் அமைந்திருக்கும். சில ஈமப் பேழைகள் விலங்கு வடிவிலும் இருந்திருக்கின்றன. ஆந்திர மாநிலம் சங்கவரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த ஈமப்பேழை ஆடு போன்ற வடிவத்தில் உள்ளது. கேரளாவில் பசுமாட்டின் வடிவில் ஈமப்பேழை கிடைத்துள்ளது. இவை தென்னிந்தியாவின் பல ஈமச்சின்னங்களின் அடியில் காணப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சானுாரில் நடந்த அகழாய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பல கற்பதுக்கைகளுக்கு உள்ளே இவை கண்டறியப்பட்டுள்ளது. இவை தாழிகள் போலப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தோற்றத்தில் ஈமத்தாழிகள் என்பவை வேறு, ஈமப்பேழைகள் என்பவை வேறாகும். உயிரிழந்தவர்களின் எலும்புகள், புழங்கு பொருட்கள் இவற்றின் உள்ளே வைக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளைப் போல அதிகளவில் இவை காணப்படுவதில்லை. சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. அன்றைய சமூகத்தில் இனக்குழு தலைவர்கள் போன்ற தலைமைத்துவத்தில் இருந்தவர்களுக்காக தனித்துவமாக இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மண்பாண்ட ஓடுகள் கருப்பு சிவப்பு நிறத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் ஈமப்பேழையில் வைக்கப்பட்ட மண்ணால் செய்து சுட்டெடுக்கப்பட்ட புழங்கு பொடுட்களாகும். இறந்த உடலோடு அவ்வுடலுக்குரியவர் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் அன்றைக்கு இருந்தது. இங்கு கண்டறியப்பட்ட ஓடுகள் 4 மி.மீ., தடிமன் கொண்டவையாகும். ஈமப்பேழையின் கால் 14 செ.மீ., நீளமும், அதன் வட்ட வடிவமான அடிப்பகுதி 5.5 செ.மீ.,சுற்றளவும் கொண்டதாக உள்ளது. பேழையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து கிடைத்த ஒரு துண்டானது 4 செ.மீ. தடிமண் கொண்டதாக உள்ளது. பேழையானது களிமண்ணால் செய்யப்பட்டு சுட்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன் உட்புறம் அடர்கருமை நிறத்திலும், வெளிப்புறங்கள் செங்காவி நிறம் பூசப்பட்டும் காணப்படுகின்றது. இந்த ஊர் ‘சுடுகாட்டூர்’ என்று அழைக்கப்படுவதும் கவனத்திற்குரியதாகும். ஏனென்றால் இது போன்ற ஈமச்சின்னங்கள் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் தான் பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற பழங்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது இம்மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தினை பறைசாற்றுவதாக உள்ளது. இதை மக்கள் அரியும் வண்ணம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE