ரஃபேல் கை கடிகாரத்தின் பில்லை அண்ணாமலை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? - அமைச்சர் செந்தில்பாலாஜி சவால்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஃபேல் கை கடிகாரத்தை வாங்கியதற்கான பில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் இன்று (டிச.20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளில் வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. மின்சாரத் துறை மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தால், அதை சரி செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது. எனினும், பாஜக தலைவர்கள் ஆதாரம் இல்லாமல் தமிழக அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

ரஃபேல் கை கடிகாரத்தை வாங்கியதற்கான பில் உள்ளதா என்றுதான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நான் கேள்வி எழுப்பி இருந்தேன். அந்த கடிகாரத்தை அவர் தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின் வாங்கினாரா என்பது முக்கியமல்ல. அவர் வாங்கினாரா இல்லை யாராவது அவருக்கு வெகுமதியாகக் கொடுத்தார்களா என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. அண்ணாமலைக்கு மடியில் கணம் உள்ளது. முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கை கடிகாரத்திற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும். எனது இந்த கேள்வியை அடுத்து, ரஃபேல் கை கடிகாரத்திற்கான பில்லை தயாரிக்கக்கூடிய பணி தற்போது நடைபெற்று வருகிறது என அறிகிறேன். முதலில் அவர் அதனை வெளியிடட்டும். பிறகு, அடுத்தகட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை கூறுகிறேன்" என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE