காப்புக் காடுகளைச் சுற்றி குவாரிகளுக்கு அனுமதி: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்," காப்புக் காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டுதான் இதற்கான தடையே விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலக்களிப்பது விபரீதமான முடிவாகும்.

தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளில் இருந்து பெருமளவிலான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு சில குவாரி முதலாளிகளின் நலனுக்காக இயற்கை பாதுகாப்பில் சமரசம் செய்வது கண்டனத்திற்குரியது. எந்தவித ஆய்வுகளும், அறிவியல்பூர்வ பார்வையுமின்றி துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காடுகளின், பசுமைப் பரப்பின் அளவை அதிகரிக்க இந்தியாவிலே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு இந்த அரசாணை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால் தமிழக முதல்வர் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE