புதுச்சேரி | சாலை அமைக்காதது ஏன்? - என்.ஆர் காங்., எம்எல்ஏவை முற்றுகையிட்டு தொகுதி மக்கள் மறியல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சாலை அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்டு தொகுதி மக்கள் சராமரியாக கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் 11 வீதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதை கண்டித்து புதுவை-கடலுார் சாலையில் இன்று மறியல் செய்ய பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் முருங்கம்பாக்கம் சந்திப்பில் தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து வந்த அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ பாஸ்கர் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் பொதுமக்கள் எம்எல்ஏ பாஸ்கரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். "20 ஆண்டுகளாக சாலையில்லை. அரவிந்தர் நகர் பகுதி என கேட்டாலே ஆட்டோக்கள் வருவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பெண்கள் வாகனத்தில் செல்லும்போது பலமுறை விழுந்து கை கால்கள் உடைந்துள்ளது.

மழைக்காலத்தில் சாலைகள் முழுமையாக நீரில் நிரம்புகிறது. இப்பகுதியில் சென்று வரவே முடியாது. பள்ளிகளுக்கும், வேலைக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் குப்பை வாரும் பணியும் நடைபெறுவதில்லை" என பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார்களை கூறி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் எம்எல்ஏ திணறினார். எம்எல்ஏவையும் மீறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் எம்எல்ஏ பாஸ்கர், "பணிகளை மேற்கொள்ள அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கவில்லை. இதனால் பல பணிகள் செயல்படுத்தப்படாமல் நிற்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதி வந்தவுடன் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறேன்" என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்களோடு எம்எல்ஏ பாஸ்கர் சென்று அரவிந்தர் நகர் பகுதிகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

மார்ச் மாதத்திற்குள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் முருங்கப்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE