திமுக தலைவராக என்னை முன்மொழிந்தவர் அன்பழகன்: நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘திமுக செயல் தலைவராகவும், திமுக தலைவராகவும் என்னை முன்மொழிந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்’’ என்று அவரது நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்றுநடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, க.அன்பழகன் படத்துக்குமலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நூற்றாண்டு நினைவு சிறப்பிதழை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்று க.அன்பழகன் குறித்து பேசினர்.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘முதலில் மனிதன், பிறகு அன்பழகன், சுயமரியாதைக்காரன், அண்ணாவின் தம்பி, கலைஞரின் தோழன்’ என்று கூறி தன்னை அடையாளப்படுத்திய க.அன்பழகன், தனது இறுதி மூச்சு வரை அவ்வாறே வாழ்ந்தார். இதில் 6-வதாக நான் உரிமையோடு கூறுவது அவர் என் பெரியப்பா. இந்த ஆண்டு முழுவதும் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம்.

அரசியல் வரலாற்றில் நட்பும் புரிதலும் இருந்த ஆளுமைகள் என்றால் கருணாநிதியும் அன்பழகனும்தான். இத்தகைய நண்பர்களை அரசியலில் பார்ப்பது அரிது.

‘கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான்’ என அடையாளம் காட்டியவர் என் பெரியப்பா. என் அரசியல் வாழ்க்கையும் அவரிடத்தில் இருந்துதான் தொடங்கியது. அவர் தந்த உற்சாகத்தின் அடிப்படையில்தான் அண்ணா அறிவாலயத்தை கட்டிக் காக்கக்கூடிய பொறுப்பு கிடைத்தது. பிறகு கோட்டையையும், தமிழகத்தையும் காக்கும் பொறுப்பும் கிடைத்தது.

அண்ணா அறிவாலயம் கட்டி முடித்து, அங்கு தலைமையகத்தை மாற்றும் போது அனைத்து சார்பு அணியினரும் அன்பகத்தை கேட்டனர். நானும் கேட்டபோது கருணாநிதி தர மறுத்துவிட்டார். ஆனால், அதிக நிதி திரட்டும் போட்டி மூலம் எங்களுக்கு அன்பகத்தை கிடைக்கச் செய்தவர் என் பெரியப்பா. ‘கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினிடம் தெரிந்தது’ என பாராட்டியவர் அன்பழகன். இப்போது வாரிசு, வாரிசு என கூறுகின்றனர். என் மீது அந்த விமர்சனம் வந்தபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தார். ‘ஸ்டாலின் எனக்கும் வாரிசு’ என்று கூறினார். செயல் தலைவராகவும், திமுக தலைவராகவும் என்னை முன்மொழிந்தார். நான் அதற்கான தகுதி பெறுவதற்கு காரணமானவரும் அவரே.

அன்பழகனின் புன்சிரிப்பு முகம் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது. எந்த அளவு கோபக்காரரோ, அதே அளவுக்கு பாசக்காரர். தன்மானம், இனமானத்தோடு வாழ்வேன் என உறுதிபூண்டு வாழ்ந்தவர். அவர் வழியில் நாமும் நடக்க வேண்டும். பட்டிதொட்டியெல்லாம் திராவிடப் பாசறை நடத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE