மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் பசுமைவழி சாலையில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரியில் தொடங்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பசுமைவழி சாலையில் சுரங்கம் தோண்டும் பணியை ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடியில் 119 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.) 3-வதுவழித்தடமாகும்.

இது வடக்கு, தெற்கு, மத்திய சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடம்ஆகும். அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இந்த வழித்தடம் அமைகிறது. இப்பாதையில் அடையாறு ஆறு, சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் சுரங்கப் பாதை அமைப்பது சவாலான பணியாக கருதப்படுகிறது.

இதில் முதல்கட்டமாக, மாதவரம் பால்பண்ணை பகுதியில் முதலாவது சுரங்கம்துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தும் பணி அக்டோபரில் தொடங்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் பசுமைவழி சாலையில் சுரங்கம் தோண்டும் பணியை ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் பசுமைவழி சாலையில் மெட்ரோரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது, சுரங்கம் துளையிடும் இயந்திர பாகங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது.

பசுமைவழி சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை பணி நடைபெறும். ஆற்றுப்படுகையில் இருந்து 7 மீட்டர் கீழே சுரங்கப் பாதை அமைக்கப்படும். இது மிகவும் சவாலான பணியாக இருக்கும். இதற்காக, பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம். சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE