இந்திய ஒற்றுமை யாத்திரை |  டிச.24 டெல்லியில் ராகுலுடன் 'கை' கோக்கிறார் கமல்ஹாசன்: அதிகாரபூர்வ அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் வரும் 24-ம் தேதி டெல்லியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொள்கிறோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகத்தான் இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். ஆர்டிஐ சட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டபோது, மநீம தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பின் காரணமாக மக்களின் கருத்துக் கேட்பு அடுத்த மாதம் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அவரது கைப்பட எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கானது அல்ல. இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு யாத்திரை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெற்றிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தொடர்ந்து கட்சியைப் பலப்படுத்தும் விதமாக ஆங்காங்கே தொடர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா வழியே சென்று இந்த நடைபயணம் தற்போது ராஜஸ்தானை அடைந்துள்ளது. இந்த பயணத்தின் போது ராகுல் காந்தியை பல்வேறு அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் சந்தித்தனர். அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் யாத்திரையில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE