தமிழகத்தில் பதிவான சட்டவிரோத ஆயுத வழக்குகளை என்ஐஏ, சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் பதிவான சட்டவிரோத ஆயுத வழக்குகளை என்ஐஏ, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

மதுரை நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்மேகம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2018-ல் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை மற்றும் திருச்சியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், தங்கள் இயக்கத்துக்கு நிதி சேர்ப்பதற்காக சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது.

இவர்கள் சென்னை, கோவை, திருப்பூரில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்குகளை தமிழக போலீஸார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை.

எனவே, சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்ஐஏ தாக்கல் செய்த பதில் மனுவில், என்ஐஏ சட்டப் பிரிவு 8-ன் கீழ் வரும் சட்டவிரோத ஆயுத வழக்குகளை மட்டுமே தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்க முடியும். இதுவரை சட்டவிரோத ஆயுத வழக்குகள் என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மேற்குவங்கத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கியுடன் ரயிலில் வந்த பிரதீப், கமல் ஆகியோர் 2018-ல் திருவொற்றியூரில் கைது செய்யப்பட்டனர். பின்னர் சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். 5 கள்ளத் துப்பாக்கிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல, திருச்சி சிபிசிஐடி தாக்கல் செய்த பதில் மனுவில், திருச்சியில் 2018-ல் கன்டோன்மென்ட் போலீஸார் நடத்திய சோதனையில், ஒருவர் கைது செய்யப்பட்டு, 2 கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கியை விற்றதாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ணா முராரி திவாரி கைது செய்யப்பட்டார். நெல்லையில் கலைசேகர், எட்டப்பன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 8 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத ஆயுத விற்பனை வழக்கை தமிழக போலீஸார் சிறப்பாக விசாரித்து வருகின்றனர். மனுதாரர் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணையில் குறைபாடு இருந்ததாக, எந்த ஆவணத்தையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை.

இதனால் விசாரணையை வேறு அமைப்புகளுக்கு மாற்ற வேண்டியதில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை முறையாக நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்கை, வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை. இந்த வழக்குகளை போலீஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும். விழிப்புடன் செயல்பட்டு, சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE