இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோவை, அந்தப் பெருமையை தக்கவைத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்று தொழில் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சிறந்த கலாச்சாரம், கொஞ்சிப் பேசும் கொங்குத் தமிழ், வந்தாரை வாழ வைக்கும் பண்பாடு, மரியாதை மிகுந்த மக்கள் உள்ளிட்ட பெருமைகளுடன், மேற்கு மண்டலத்தின் மையமாய் திகழ்கிறது கோவை மாவட்டம்.
இந்தப் பகுதியில் விவசாயமே பிரதானத் தொழிலாகத் திகழ்ந்துள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் பருத்தி சாகுபடி அமோகமாய் இருந்தது. கொங்கு மண்ணின் தன்மையும், தட்பவெப்ப நிலையும் பருத்தி உற்பத்திக்கு உறுதுணையாய் திகழ்ந்தன. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து பருத்தியை வாங்கிச் சென்று, நூலாக மாற்றியுள்ளனர். 1888-ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்’ என்ற நூற்பாலை தொடங்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த தொழில் விரிவடைந்தது. ஒருகட்டத்தில் நூற்பாலைத் தொழில் பிரம்மாண்டமாக மாறி ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற பெயரை கோவைக்குப் பெற்றுத் தந்தது.
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன், ராமசாமி நாயுடு, டெக்ஸ்மோ ராமசாமி கவுண்டர், டெக்ஸ்டூல் பாலசுந்தரம் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றபோது, இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஊர் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால், அவர்கள் கூடிப் பேசியுள்ளனர். அப்போது கோவையில் என்ன தொழில் தொடங்கலாம் என்று அவர்கள் ஆலோசித்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைத் தேர்வு செய்தபோது, ஜி.ஆர்.தாமோதரன் மட்டும் அவர்களில் இருந்து மாறுபட்டு, கோவையில் பொறியியல் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு தொடங்கப்பட்ட பி.எஸ்.ஜி. கல்லூரி ஏராளமான பொறியாளர்களை உருவாக்கியது. பின்னர், அவர்கள் தொழில்முனைவோர்களாக மாறினர். படிப்படியாக பொறியியல், ஜவுளி நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கோவையில் உருவாகின.
பொதுத் துறை நிறுவனம் இல்லாமலேயே சிறந்த தொழில் நகரமாக கோவை மாறிய தற்கு, இப்பகுதி மக்களின் அயராத உழைப் பும், தொழில் வளர்ச்சியில் காட்டிய ஆர்வம், விடாமுயற்சியுமே முக்கியக் காரணம்.
‘சிறிய ஆணி முதல் ராக்கெட் உதிரிப் பாகங்கள் வரை கோவையில் தயாராகும்’ என்ற பெருமையும் இந்த நகரத்துக்குக் கிடைத்தது. மத்திய அரசுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நேரடியாகவும், மறைமுக மாகவும் வருவாய் கிடைக்கும் அளவுக்குத் தொழில்கள் விரிவடைந்தன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் என்ற பெயரும் கோவைக்கு பெருமை சேர்த்தது.
மோட்டார் பம்ப், வெட் கிரைண்டர்கள்
நாட்டின் சிறந்த பொறியியல் நிறுவனங் களும், வார்ப்படத் தொழிற்சாலைகளும் கோவையில் அமைந்துள்ளன. வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்ப்கள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என இங்கு பல்வேறு பொருட்களும் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்களில் 50 சதவீதமும், வெட் கிரைண்டர்களில் 90 சதவீதமும் கோவையில் உற்பத்தியாகின. அதுமட்டுமின்றி கல்வி, மருத்துவம், சுற்றுலா என அனைத்துத் துறைகளிலுமே கோவையின் கொடி பறக்கத் தொடங்கியது.
கணபதியில் செயல்படும் மோட்டார் பம்ப்செட் நிறுவனம்.
ஆனால், 1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, தொழில் துறையை நிலைகுலையச் செய்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பினர். உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழில் ஆர்டர்களும் குறையத் தொடங்கின. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோவை என்றாலே அச்சமடைந்தனர்.
இந்த நிலையை மாற்ற கோவை தொழில்முனைவோர் பகீரத முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது.
கொஞ்சம், கொஞ்சமாக நிலைமை சீரடையத் தொடங்கியது. ஆனாலும், மின் தட்டுப்பாடு, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட காரணிகள் இழந்த பெருமையை மீட்கத் தடையாகத்தான் உள்ளன. அதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளும் கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவினால்தான், நாட்டின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்று என்ற பெருமையைத் தக்க வைக்க முடியும் என்கிறார்கள் கோவை தொழில் நிறுவனத்தினர்.
ஒற்றைச் சாளர முறை அவசியம்
டி.நந்தகுமார் மற்றும் வி.சுந்தரம்
இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் டி.நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர், பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதியைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே, ஒற்றைச் சாளர முறையில் தொழில் அனுமதி என்பது மிகவும் அவசியம். அதேபோல, தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மையத்தை (என்.ஐ.எம்.இசட்.) கோவையில் அமைக்க வேண்டும். சாலை, ரயில், விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், வங்கிகளில் எளிதாக தொழில் கடனுதவி கிடைக்கவும் உதவ வேண்டும். நில வகைப்பாடு மாற்றத்தை (மாஸ்டர் பிளான்) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். 1994-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவே இல்லை என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் (கொடிசியா) தலைவர் வி.சுந்தரம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள தொழிலாளர்கள் கோவையில் தங்கிப் பணிபுரிகின்றனர்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொழில்துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சம்பளம்கூட வழங்க முடியாத நிலையில், ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இதனால், உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சாலைகளை அகலப்படுத்துதல், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்குதல், லாரிகள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாணுதல், அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் மற்றும் சேவை வரித் திட்டத்தை தெளிவுபடுத்தி, விரைவில் அமல்படுத்த வேண்டும். கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, இருகூர் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சுற்றுவட்ட ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். அவிநாசி சாலையில் உயர்நிலைப் பாலத்தை அமைக்க வேண்டும்.
400 ஏக்கரில் 2 தொழில் மையம்
மோப்பிரிபாளையம், கள்ளப்பாளையம் ஆகிய இடங்களில் முறையே 240, 150 ஏக்கரில் இரு தொழில் மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். இவற்றில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமையும். அதன் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்நியச் செலாவணியும் அதிகரிக்கும். இதற்கான திட்ட வரைவு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. வரும் மாரச் மாதத்துக்குள் அனுமதி கிடைத்தால், ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கிவிடுவோம்.
ராணுவத் தளவாட நிறுவனம்
அதேபோல, கொடிசியா உறுப்பினர்கள் இணைந்து, பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள் ளோம். சுமார் ரூ.100 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலை மூலம், கோவையின் தொழில் வளர்ச்சி மேம்படும். 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில், தற்போது சுமார் 3 லட்சம் சதுரஅடி பரப்பில் 5 அரங்குகள் அமைந்துள்ளன. இங்கு பல்வேறு தொழில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் கருத்தரங்குக் கூடமும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சேலம் உருக்காலை, திருச்சி பெல் நிறுவனம் போன்ற பெரிய அளவிலான பொதுத் துறை நிறுவனத்தை கோவையில் உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கோவையின் தொழில், வர்த்தக மேம்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி, தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடைவதுடன், மிகச் சிறந்த கல்வி, மருத்துவ மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் கோவை மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கின்றனர் கோவை மாவட்ட மக்கள்.
கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன்: கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 689 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செயயப்பட்டு, ரூ.24,317 கோடி முதலீட்டில் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடன் திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக ரூ.8,507 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவதுடன், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், ஆட்சியர் தலைமையில் இயங்கும் ஒற்றைச்சாளர இடர்நீக்குக் குழு மூலம், பல்வேறு துறைகளிடமிருந்து தொழில் அனுமதியும் பெற்றுத்தரப்படுகிறது.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம்: நகை தயாரிப்புக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கோவை மாவட்டத்தில், முன்பு 1.50 லட்சம் பொற்கொல்லர்கள் இருந்தனர். கொல்கத்தா, மும்பைக்குப் பிறகு கோவை மாவட்டம்தான் தங்க நகைகள் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றிருந்தது. 1998 சம்பவத்துக்குப் பிறகு இந்நிலை மாறத் தொடங்கியது. தற்போது 55 ஆயிரம் பேர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
நவீன டிசைன்கள், எடை குறைந்த நகைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்ப வசதி, டிசைனிங் ஸ்டுடியோ, அதிநவீன கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மையத்தை கோவையில் உருவாக்க வேண்டும். திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் பயிற்சி நிலையத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.மணிராஜ்: கோவையில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பம்ப்செட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 70 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இத்தொழில், மின்வெட்டுப் பிரச்சினையின்போது பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், குஜராத்தை நாடிச் சென்றனர் டீலர்கள். தற்போது, பணத் தட்டுப்பாட்டால் 50 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது.
தமிழக அரசின் உள்ளாட்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகள் மூலம் வாங்கப்படும் மோட்டார் பம்ப்செட் போன்றவற்றை, சிறு, குறு உற்பத்தியாளர்களிடமிருந்தே வாங்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழை எளிதில் பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் மண்டல ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
கோவை மாவட்ட சிஐடியு தலைவர் சி.பத்மநாபன்: உளவியல் ரீதியாகவே கோவை மக்கள் தொழில்முனையும் ஆர்வம் கொண்டவர்கள். உழைப்பதற்கு அஞ்சாத தொழிலாளர்கள். ரவுடித்தனம், ஜாதி மோதல் இல்லாதது, 75 ஆண்டுகால தொழிற்சங்க பாரம்பரியம் உள்ளிட்ட பெருமைகள் கோவைக்கு உண்டு.
தொழிற்சங்க இயக்கம் பலவீனமடைந்ததே சமீபத்திய மத ரீதியிலான மோதல்களுக்கு காரணம்.
மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. இதனால், 1970-1990-ம் ஆண்டுகளில் இருந்த தொழில் வளர்ச்சி, கடந்த 25 ஆண்டுகளாக இல்லை.
இந்நிலையை மாற்ற வேண்டும். மூலப் பொருட்களை எளிதில் கொண்டு வருவதற்கான போக்குவரத்து வசதி, சிறப்பு ரயில், அனைத்து வசதிகளுடன் கூடிய தொழில் மையம், பெரிய அளவிலான கிடங்கு ஆகியவை தற்போதைய தேவைகளாகும். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
கோவையில் உள்ள சர்வதேச விமானநிலையத்திலிருந்து சார்ஜா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்குத்தான் விமானங்கள் இயங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்க வேண்டும்.
அதேபோல, தொடர் விமான சேவை, சர்வதேச விமானநிலையங்களை இணைக்கும் வகையிலான சேவையும் அவசியம். தற்போதுள்ள விமான ஓடுதளம் வெளிநாடுகளைச் சேர்ந்த, மிகப் பெரிய விமானங்கள் வருவதற்கும், நிறுத்துவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, விமான நிலைய விரிவாக்கம் அவசியம். இதற்காக 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நில ஆர்ஜிதப் பணிகளை மேற்கொண்டு, நிலத்தைப் பெற்றுத் தந்தால், இந்திய விமானநிலைய ஆணையம், விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர் விமானநிலைய அதிகாரிகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago