புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறுவதற்கு மத்திய அரசை எதிர்த்து ரங்கசாமி தெருவில் இறங்கி போராட தயாரா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என சமூக அமைப்பினர் நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. கோப்புகள் தேங்கி நிற்கின்றன. அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு காலதாமதம் ஆகிறது. புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்தால், அது நடைபெறவில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுக உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். 2 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லிக்கு சென்று தர்ணா போராட்டமும் நடத்தினோம். இதற்கு அழைப்பு விடுத்தும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக வராமல் புறக்கணித்தன. 2021-ல் என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்துதான் முதல் கோரிக்கை. அதேபோல், பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.
மாநில அந்தஸ்து பெறுவதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக முதல்வர் கூறினார். ஆனால், இப்போது நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை. நினைப்பதை எல்லாம் செய்ய முடியவில்லை என்று புலம்புகிறார். முதல்வரின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லையா? ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அந்தஸ்து பெறுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாரா? அல்லது ஆதரவுதான் கேட்டாரா? இவர் புலம்புவதற்கு பின்னணி என்ன? ஆளுநர் தானும் முதல்வரும் இணைந்து செயல்படுகிறோம். நிர்வாகத்தில் தலையீடு இல்லை என்கிறார். ஆனால், முதல்வர் அதிகாரிகளை குறை கூறுகிறார். இதில் எது உண்மை.
எங்களை போல மத்திய அரசை எதிர்த்து போராட தெம்பு, திராணி இருக்கிறதா? மத்திய அரசுக்கு அடி பணிந்து ஒரு பொம்மை ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். ரங்கசாமியால் தன்னுடைய அமைச்சரவை எடுத்த முடிவையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழலில் மத்திய அரசை எதிர்த்து மக்களுக்காக தெருவில் இறங்கி போராட தயாரா? ஆட்சி அதிகாரத்துக்காகவும், முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாஜகவுக்கு அடிபணிந்து கூனி குறுகி ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்கள். ஆதங்கத்தை பேசுவதால் மட்டும் மாநில அந்தஸ்து பெற முடியாது. அதற்கான ஆக்கப்பூர்மான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதை எடுக்க தவறவிட்டார். எனவே, அவர் முதல்வராக இருக்க தகுதியற்றவர்.
பாஜக தலைவருக்கு இப்போது ஞானோதியம் வந்திருக்கிறது. அவர் தங்களது கட்சியின் கொள்கை மதுவிலக்கு. 5 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது, 150-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளுக்கு கொடுத்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால் புதுச்சேரியில் தெருவெல்லாம் சாராய ஆறு ஓடுகிறது. சாமிநாதன் மதுகடையை மூடுவதற்கு போராட தயாராக உள்ளாரா? அல்லது கூட்டணியில் இருந்து பாஜக வெளியே வருவதற்கு தயாரா? அறிக்கை விட்டால்போதாது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவால் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த முடியுமா? ஊழலை ஒழிக்க முடியுமா? இது ஊழல் நிறைந்த ஆட்சியாக இருக்கிறது.
இந்த ஆட்சியில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இது பெஸ்ட் புதுச்சேரி அல்ல. ஒஸ்ட் புதுச்சேரி. கிரண்பேடி விஷத்தை கொடுத்து சாகடிப்பார். தமிழிசை சர்க்கரையை கொடுத்தே சாகடித்து விடுவார். ரங்கசாமியால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும். அதை செய்யாமல் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். நான் முதல்வருக்கு ஆலோசனை கூறினாலும் ஏற்க மாட்டார். அவரே ராஜா, அவரே மந்திரி. அதுதான் ரங்கசாமி. மண் குதிரையும் ரங்கசாமியும் ஒன்றுதான்.’’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago