ஆபரேஷன் கஞ்சா வேட்டை: பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்று வருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் கஞ்சா வேட்டை 1.0 தொடங்கப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் இன்னும் கஞ்சா ஒழிக்கப்படாதது ஏன்? அதிக எண்ணிக்கையில் கஞ்சா வணிகர்கள் கைதாவது ஏன்? என்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அதில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.

கஞ்சா வணிகர்களை மட்டும் கைது செய்வதில் பயனில்லை. மாநிலங்களைக் கடந்து பரந்து விரிந்து கிடக்கும் கஞ்சா வலைக்கட்டமைப்பின் வேரைக் கண்டறிந்து அகற்ற வேண்டும். கஞ்சா விளைவிக்கப்படும் இடங்களை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதை தடுக்க வேண்டும்!

கஞ்சா விற்றதாக கைதாகி விடுதலையானவர்கள் மீண்டும் கஞ்சா விற்பது வாடிக்கையாகி விட்டது.இது தொடர்ந்தால் கஞ்சாவை ஒழிக்க முடியாது. கஞ்சா விற்றதாக இரண்டாவது முறை கைதாவோருக்கு கடும் தண்டனையும், மூன்றாவது முறை கைதாவோரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக மூன்று இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE