முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரி மனு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்யன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடற்கரை சூழலியல் பாதுகாப்பில் கடல் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முட்டையிடும் மையமாக கடலோர மணல் பரப்புஉள்ளது. மணல் பரப்பு அழிக்கப்படுவதால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களாக கடல் ஆமைகள் உள்ளன.

சென்னை கடலோர பகுதிகளான நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான 14 கி.மீ. தொலைவில் கடந்த 8 ஆண்டுகளில் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் மட்டும் 1,522 கடல் ஆமைகள் இறந்துள்ளன.

மெரினா கடற்கரையின் வடக்கு எல்லையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1988-ல் மெரினா கடற்கரையின் ஒரு பகுதி மயானமாக அறிவிக்கப்பட்டதால், அந்த இடம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வராது.

3 பேரின் நினைவிடங்களும் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டன. கருணாநிதியின் நினைவிடம் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நாம் அனுமதித்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை அங்கு காண நேரிடும்.

கருணாநிதியின் தமிழ் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.80 கோடியில், 8,551.13 சதுரமீட்டர் பரப்பில், 42 மீட்டர் உயர பேனா நினைவிடம் அமைக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக மெரினா கடற்கரையில் இருந்து தரை பரப்பில் 290 மீட்டர், கடலில் 360 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது.

இது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வருகிறது. அங்கு எந்த கட்டுமானங்களை எழுப்பினாலும், அது விதிமீறலாகும். எனவே, பேனாநினைவுச் சின்னம் அமைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு அமர்வின் நீதித்துறைஉறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக நேற்று வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கோரியுள்ளது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE