மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 60 அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது முதல்வரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்களில் பாரபட்சம் நிலவுகிறது. தனி மாநில அந்தஸ்துக்காக, விரைவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, ‘‘மாநில அந்தஸ்து தரக்கோரி மத்திய அரசிடம் பலமுறை கேட்டோம்; கிடைக்கவில்லை. நிர்வாகத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் இதன் சிரமங்கள் தெரியும்.

மாநில அந்தஸ்து இல்லாததால் மக்களுக்கான பல விஷயங்களை செய்ய முடியாதநிலை உள்ளது. இதனால், அதிகமாக மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என கோரியிருக்கிறீர்கள். சட்டரீதியாக செய்ய வேண்டியதை செய்வோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE