செல்லிப்பட்டு படுகை அணை பணிகளை தொடங்காத புதுச்சேரி அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய படுகை அணை கட்டுமானப் பணிகளை தொடங்காத புதுச்சேரி அரசை கண்டித்து கருப்புக் கொடியுடன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து அணை பராமரிக்கப்படாததால் கடந்த ஆண்டு இறுதி மற்றும் நடப்பாண்டின் தொடக்கத்தில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் சென்று சேர்ந்தது.

பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அணையை பாதுகாக்க தவறியதால் அணை உடைந்ததாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். புதிய அணையை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.20.40 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் படுகை அணை உடைந்து கடந்த நவம்பர் 20-ம் தேதியுடன் ஓராண்டானது.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் செல்லிப்பட்டு படுகை அணைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி என போஸ்டர் தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ஆனால் படுகை அணை உடைந்து 13 மாதங்கள் ஆகியும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்லிப்பட்டு படுகை அணை பணிகளை தொடங்காமல் மெத்தனமாக இருந்துவரும் புதுச்சேரி அரசை கண்டித்தும், பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் கருப்புக் கொடியுடன், கற்களை எடுத்து அணையை கட்டுவது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, ''அணையில் சிறிய உடைப்பு ஏற்பட்டபோதே அரசு கொண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டதால்தான், முழுமையாக உடைந்தது. ஆனால் ஓராண்டாகியும் புதிய அணை கட்டப்படவில்லை. எனவே அரசு விரைந்து அணை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அணையை கட்ட முடியாது என்று அரசை அறிக்கை கொடுக்க சொல்லுங்கள். அவ்வாறு கொடுத்தாலாவது விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி பிச்சை எடுத்தாவது நாங்களே அணையை கட்டிக்கொள்கிறோம்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்