“பதவி விலகுவது தவிர வேறு வழியில்லை” - மக்களின் அடிப்படை வசதிக்காக வார்டு உறுப்பினர் செல்வியின் ஆவேசக் குரல்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: "வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கிறார்கள்... அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால், எனது உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை” என்று ஏராகரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் செல்வி குரல் எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் வட்டம், ஏராகரம் ஊராட்சி 8-வது வார்டு, பட்டக்கால் தெரு, அம்பேத்கர் நகரில் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அத்தடி குளத்திற்கு அசூர் வாய்க்காலிருந்து தண்ணீர் வந்து, குளம் நிரம்பியவுடன், சுமார் அரை கிலோ மீட்டர் தூரமுள்ள செட்டி குளத்திற்கு வடிகாலாக செல்லும்.

இந்நிலையில், இக்குளத்தை சுற்றிலும் வீடுகள் வந்ததால், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதைகள், ஆக்கிரமிக்கப்பட்டு வாய்க்கால்கள் இருக்கும் சுவடே இல்லாமல் போய்விட்டது. இதனால், அண்மையில் பெய்த மழையினால், அக்குளத்தில் தண்ணீர் நிரம்பி, வடிவதற்கு வழியில்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. மேலும், மழை நீருடன், கழிவு நீரும் கலந்து இருப்பதால், அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகவும், துர்நாற்றம் வீசுவதால், அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏராகரம் ஊராட்சி 8-வது வார்டு, பட்டக்கால்த் தெரு, அம்பேத்கர் நகரில் உள்ள குளத்தைத் தூர் வாரி, வடிகால்கள் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து 8-வது வார்டு உறுப்பினர் வீ.செல்வி கூறியது: "இங்குள்ள குளத்தில் பல நாட்களாக மழை நீர் தேங்கி, அதிலுள்ள கழிவுகளால் துர்நாற்றம் வீசுகின்றது. இந்நிலையில், அண்மையில் பெய்த மழையினால் குளத்தில் மழை நீர் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்து விட்டது. மேலும், புறவழிச்சாலைக்காக சாலையை உயர்த்தியதால், அங்குப் பெய்த மழை நீரும், இந்த தெருவுக்குள் வந்து தேங்கி விடுகிறது. இதனால் தெருக்களில் நடக்க முடியாத நிலையும், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என அனைவரும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், குளத்தின் கரையிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, கழிவு நீரில் நிற்க வேண்டியுள்ளதால், உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இங்குள்ள குடிநீர் குடித்த ராஜ்குமார் மகள் அனாமிகா (3) உள்பட 3 குழந்தைகள் மற்றும் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்பகுதியின் நிலை குறித்து, ஒவ்வொரு ஊராட்சி மன்றத் கூட்டத்தின் போதும், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல முறை தகவலளித்தும் பலனில்லாமல் உள்ளது. என்னை உறுப்பினராக 15 ஆண்டுகளாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு, என்னால் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராததால், வாக்களித்த மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, ஏராகரம் ஊராட்சி 8-வது வார்டு, பட்டக்கால் தெரு, அம்பேத்கர் நகருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால், எனது உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE