தொழில் உரிமம் பெறாமல் ரிச்சி தெருவில் இயங்கும் 4,000 கடைகள்: சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்ணா சாலை ரிச்சி தெருவில் மாநகராட்சி தொழில் உரிமம் இன்றி 4 ஆயிரம் கடைகள் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அவகாசம் வழங்கியும் உரிமம்பெறாத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொத்து வரி, தொழில் உரிமம் மற்றும் தொழில்வரி ஆகியவை முக்கிய வருவாய் இனங்களாக உள்ளன. மாநகராட்சியின் சொந்த வருவாயை பெருக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

மாநகராட்சி தரவுகளில் உள்ள அளவைவிட கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, சொத்து வரி திருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சொத்து வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. வருவாயை பெருக்கும் திட்டத்தின் மற்றொரு பகுதியாக உரிமம் இல்லாமல் இயங்கிவரும் கடைகளுக்கு, மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்துவது, கடைக்காரர்களிடம் தொழில்வரி வசூலிப்பது என முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாசாலை, ரிச்சி தெருவில் சுமார் 4 ஆயிரம் கடைகள் மாநகராட்சியிடம் உரிமம் பெறாமல் இயங்கி வருவது, மாநகராட்சி வருவாய்த் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கடைகள், மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதை பொருட்படுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE