சென்னை: "வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச.15) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த மாபெரும் விழாவில் சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலா ஆச்சார்யா விருது, டி.டி.கே விருது, இசை அறிஞர் விருது, நிருத்ய கலாநிதி விருது பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பில், தமிழ்நாட்டின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இசையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அத்தகைய உயரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இசைத்துறைக்கு தொண்டாற்றி உங்களைப் போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழைப் பிரிப்பார்கள். இந்த முத்தமிழில் முதலில் பிறந்தது நாடகம்தான் என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சொல்வார். ஆதிமனிதனின் முதல் மொழி சைகையே. அதனால்தான் முதலில் பிறந்தது நாடகம். அவனது ஒலிக்குறிப்புகள் இசையை உருவாக்கியது. அதன் பிறகுதான் எழுதக் கற்றுக் கொண்டான். அந்த வகையில் நாடகம் - இசை - இயல் என்பதே சரியான வரிசை என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார். இத்தகைய இசைத்தமிழ் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்பிருந்தே நம்முடைய தமிழ் மரபில் உள்ளது.
எழுத்து ஒலிகளின் பிறப்பையே காற்றில் இருந்து எழும் இசையாகக் கருதும் அளவுக்கு தமிழர் இசை அறிவு இருந்தது. அந்த வகையில் தமிழர்களின் இசை மரபு என்பது பழமையானது! செழுமையானது! சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியமே இசைக்காப்பியம்தான். சங்க காலம், காப்பிய காலம், பக்திக்காலம் முதல் இசையானது நமது தமிழ் மண்ணில் புதுப்புது பொலிவோடு சிறந்து விளங்கியது.
தேவாரமும் திருவாசகமும், நாலாயிர திவ்வியப் பிரபந்தமும்,பெரியபுராணமும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும்படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம். ‘இசை என்பது காதுகளுக்குப் போர்த்தி விடுகின்ற கவுரவப் பொன்னாடை’ என்று கவிஞர் மு.மேத்தா குறிப்பிட்டார். அத்தகைய கவுரவப் பொன்னாடை போர்த்தும் அரங்கம்தான் இந்த மியூசிக் அகாடமி.
பொதுவாக முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார். ஆனால் நான் இங்கே உங்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு கோரிக்கை வைப்பது காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். இன்றைய நாள் இந்து தமிழ் திசை நாளிதழில் பேட்டி அளித்திருக்கிறார் நம்முடைய மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி. நான் காலையில் படித்தேன். தனது கொள்கையை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். எங்களின் விழாக்களின் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று முரளி சொல்லி இருக்கிறார். இந்தக் கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை.
இந்தக் கொள்கை ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி அதை நினைத்துவிடக் கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக - ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கு, தமிழ்ப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும்.
பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும் மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் - தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று இங்கே கேட்டுக்கொள்கிறேன். மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல தமிழ் வளர்த்தலும்தான் என்பதை மனதில் அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து, இந்த சிறப்பான இனிய நிகழ்ச்சியில் நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சினையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், எந்த டென்ஷனும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், அது இந்த நிகழ்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது" என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago