தமிழகத்தில் முதன்முறையாக 'நூலக நண்பர்கள்' திட்டம்: திண்டுக்கல்லில் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார் 

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: பிற்போக்கு சிந்தனைகள் இல்லாமல், அறிவுசார்ந்த சமூகத்தை கட்டமைக்க, நூலக நண்பர்கள் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

பொது நூலகத் துறை சார்பில் "நூலக நண்பர்கள் திட்டம்" மாநிலத்திலேயே முதன்முறையாக வியாழக்கிழமை திண்டுக்கல்லில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ளார். இடைநிற்றல் மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். காலை உணவு திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டுவந்தவர் நமது முதல்வர். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருக்கவேண்டும் என்று அறிஞர் அண்ணா விரும்பினார். அவரது கனவை நிறைவேற்றும்விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கிராமங்களில் நூலகங்களை கொண்டுவந்தார். தற்போது வீடு தேடி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ளார். தென்மாவட்டங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மதுரையில் ரூ.100 கோடியில் கலைஞர் நூலகம் அமையவுள்ளது” என்றார்.

நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கிவைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “எல்லோருக்கும் எல்லாம் என்று தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். பிற்போக்கு சிந்தனைகள் இருக்கக்கூடாது என்ற வகையில் அறிவுசார்ந்த சமூகத்தை நாம் கட்டமைக்கவேண்டும். வாசிப்பின் முக்கியத்துவத்தை நமது மக்கள் உணரவேண்டும், என்பதற்காகத்தான் இந்த நூலக நண்பர்கள் திட்டம். குடும்பத் தலைவிகள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நூலகம் செல்ல சிரமம் இருக்கலாம், இவர்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களை வாசிக்க இந்த திட்டம் உதவும்.

ஒரு புத்தகம் நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். ஹென்றிடேவிட் என்ற ஒரு அமெரிக்க எழுத்தாளர் 1849ம் ஆண்டு எழுதிய ‘சிவில் டிஸ்ஒபீடியன்ட்’ என்ற புத்தகம் தான் 50 ஆண்டுகாலம் கழித்து காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு ஊன்றுகோலாக இருந்தது. புத்தகங்கள் ஒரு மனிதனை, ஒரு சமுதாயத்தை மாற்றும். அறிவுசார்ந்த சமுதாயத்தை புத்தகங்கள் உருவாக்கும். ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் தமிழகத்தில் தான் உள்ளது. அடுத்த ஆண்டு மதுரையில் தமிழக முதல்வரால் கலைஞர் நூலகம் திறக்கப்படவுள்ளது” என்றார்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொதுநூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன், மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, பள்ளி தாளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE