குமரியில் செயல்பாடற்ற நிலையில் பேரிடர் பாதுகாப்பு மையங்கள்

By எல்.மோகன்

சுனாமி தாக்கிய 12-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், மீண்டும் இதுபோல் ஒரு பேரழிவு நிகழ்ந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனாமியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,017 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுனாமிக்கு பிஞ்சுக் குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் ஆண்டு தோறும் இந்த நாளில் ஆறாத துயரத்துடன் கதறி அழுவது கண்ணீரை வரவழைக்கும்.

இந்நிலையில் இன்னொரு பேரிடர் நிகழ்ந்தால் அதை சமாளிக்க இதுவரை உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் குமரி மாவட்ட மீனவர்கள் அச்சத்துடனே தொழிலுக்கு செல்கின்றனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 68 கி.மீ. தூரம் நீளமான கடற்கரையை கொண்ட குமரி மாவட்டத்தில் 44 கடல்கிராமங்கள் உள்ளன. ஆனால், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பேரிடர் நிகழ்ந்தால் மீனவர்களை மீட்க நவீன உபகரணங்கள் இல்லை.

இதுகுறித்து, தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுச் செயலாளர் சர்ச்சல் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் அரசு, பேரிடர் நிகழ்ந்தால் மீனவர்களைப் பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் மீனவர்கள் கடல் மீது உள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர். சாதாரண நாட்களில் கூட குமரி மாவட்டத்தில் கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதமடைகின்றன. முட்டம், ராஜாக்கமங்கலம் கடற்கரை பகுதிகளில் சுனாமி பேரிடர் பாதுகாப்பு மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை இவை பயன்பாட்டுக்கு வரவில்லை. பேரிடர் காலத்தில் இவற்றை பயன்படுத்தி எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போயினர். இதில் ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படவில்லை.

சுனாமி தாக்கியதிலிருந்தே குமரி மாவட்டத்தில் மீனவர்களின் பாதுகாப்புக்காக குளச்சல் அல்லது கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு பேரிடர் மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டர், அதிவிரைவு கப்பல் உள்ளிட்ட நவீன வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதை மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் செய்து வருகின்றன. கடலுக்கு சென்று காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையை தருகிறது. சுனாமியின்போது பெற்றோரை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை’’ என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்