தொடர் மழையால் மூல வைகையில் வெள்ளப்பெருக்கு; சுருளி அருவியில் குளிக்க தடை

By என்.கணேஷ்ராஜ்

கண்டமனூர்: தேனி மாவட்டம் அரசரடி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வெள்ளிமலை, புலிக்காட்டு ஓடை, வாலிப்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் நீரோடையாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.

கடந்த மாதம் பெய்த மழையால் மூல வைகையில் தொடர் நீரோட்டம் இருந்தது. சில வாரங்களாக மழைப் பொழிவு குறைந்ததால் நீர்வரத்து வெகுவாய் குறைந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அரசரடி, பொம்மி ராஜபுரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை விநாடிக்கு 3,000 கனஅடிநீர் வரத்து இருந்தது. இருப்பினும் மாலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது.

பொதுவாக, மூல வைகையில் ஆண்டின் சில மாதங்களே நீர்வரத்து இருக்கும் நிலையில், இந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நீரோட்டம் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை அணை நீர்மட்டம் 65.90 அடியை எட்டிய நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 3,328 கனஅடியாகவும், நீர்வெளியேற்றம் 69அடியாகவும் உள்ளது.

சுருளி அருவியில் குளிக்க தடை: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி மழை நீரும் சுருளியில் அருவியாக கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மேகமலை பகுதியில் கனமழை பெய்ததால் சுருளி அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி கூறுகையில், ”அதிகப்படியாகவரும் வெள்ளத்தில் மரக்கட்டைகள், சிறுகற்கள் அடித்து வரப்படுகின்றன. எனவே குளிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE