‘இழுத்தடிக்க முயற்சி’ - தூய்மைப் பணியாளர் வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக் கூறி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் கே.லட்சுமணன். இவர் கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து தூய்மைப் பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த 02.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அவர் 30.06.2012 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்துள்ளார். தனது பணியை ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன், தனது சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரி அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க அரசு மறுத்துள்ளது.

இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தொழிலாளிக்கான ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும், லட்சுமணனுக்கு ஓய்வூதியப் பலன்களை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு தூய்மைப் பணியாளர், தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்காக ஏற்கெனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார்.

தேவையில்லாமல் ஒரு தூய்மைப் பணியாளரின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தை மேலும் மேலும் வழக்குகள் தொடர்ந்து, தமிழக அரசு இழுத்துச் செல்ல முற்படுவது கண்டனத்திற்குரியது. எனவே, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல செய்யப்பட்ட இந்த வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டனர்.

மேலும், இந்த அபராதத் தொகையை உச்ச நீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இதுபோன்ற தேவையற்ற , அற்பமான வழக்குகளை தொடர அனுமதியளித்த அதிகாரிகளிடமிருந்து இந்த அபராதத் தொகையை தமிழக பள்ளி கல்வித் துறை தேவைப்பட்டால் வசூலித்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE