இனி நடிக்க மாட்டேன்; விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி 

By செய்திப்பிரிவு

சென்னை: மாமன்னன் தான் தனக்குக் கடைசிப் படம் என்றும் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பொறுப்பை என்னால் முடிந்த அளவுக்கு சரியாக செய்வேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தப் பணிகளில் எனது கவனம் இருக்கும்.

என் மேல் விமர்சனம் வைப்பவர்கள் வாரிசு அரசியல் என்று கூறுவார்கள். எனது செயல் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் படி செயல்படுவேன். கமல் தயாரிப்பில் நடிக்க போகும் படத்தில் இருந்து விலகிவிட்டன். எனது கடைசிப் படம் மாமன்னன் தான். அதற்கு மேல் நடிக்க மாட்டேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE