உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடவே சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதனும், சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நிமிடங்கள் நடந்த பதவியேற்பு விழா: முன்னதாக, ஆளுநர் மாளிகையில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் ஆளுநரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். ஆளுநரும் கையொப்பமிட்டார். மலர் கொத்து வழங்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

உதயநிதி ட்வீட்: பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE