அரசு கேபிள் டிவியில் விரைவில் ஓடிடி செயலி - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஓடிடி செயலி உருவாக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நிறுவனம் அதிக சந்தாதாரர்களை சேர்த்து முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையை மக்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த 2007-ல் ‘அரசு கேபிள் டிவி நிறுவனம்’ உருவாக்கப்பட்டது. 2011-ல் ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்’ (டேக் டிவி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் 2017-ல் ‘டேஸ்’ உரிமம் வழங்கியது. பொதுமக்களுக்கு இலவச எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 2017-ம் ஆண்டில் டிஜிட்டல் சேவையையும், 2018-ல் எச்.டி. சேவையையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கியது. பொதுமக்களுக்கு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இந்த டிஜிட்டல் எஸ்.டி.,எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

மிகக் குறைந்த கட்டணம்: இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி என நாட்டிலேயே மிக குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் வழங்குகிறது. கடந்த நவ.19-ம் தேதி ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் சேவை தொடர்கிறது. இதர இடர்ப்பாடுகளை உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்த முதல்வர், வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்குவது, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான விஓடி, ஓடிடி, ஐபிடிவி ஆகியவற்றை வழங்கக்கூடிய எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாதங்களில் வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னோடி வர்த்தக நிறுவனமாக...: அரசு கேபிள் டிவி நிறுவனம் (டேக் டிவி) சார்பில் ஓடிடி செயலி உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களை சேர்த்து, முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மித்தல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அ.ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்