தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு சலுகைகள், இடஒதுக்கீடு வேண்டும்: மாநிலக் கல்விக் கொள்கை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சலுகைகள், இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை மாநிலக் கல்விக் கொள்கை கருத்து கேட்புக் கூட்டத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் முன்வைத்தனர்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக இந்தக் குழு ஏற்கெனவே கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து தனியார் பள்ளி சங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

அதன் விவரம் வருமாறு; அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பாகுபாடின்றி ஒரே மாதிரியான சலுகைகள், இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் ஆகிய நல்ல உணர்வுகளை போதிக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு அம்சங்களை முன்வைத்தனர். மேலும்,

மாநிலக் கல்வி கொள்கை என்பது சாத்தியமில்லாத ஒன்று.எனவே மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் சில சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் ஆகியவற்றை போதிக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE