பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களாக யுஜிசி வழிமுறைபடி பணி நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடங்களை பயிற்றுவிக்க யுஜிசியின் வழிமுறையின்படியே பட்டதாரிகள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற 2 புதிய தமிழ் மொழி பாடங்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இப்பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வழிமுறைகளின்படியே பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதாவது, முதுநிலை தமிழ் படித்து நெட், ஸ்லெட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதுவரை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படும்.

வெளிநாடுகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தமிழகத்தில் பொறியியல் படிக்கின்றனர். அவர்களும் தமிழர் மரபை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த 2 பாடநூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவர்களுக்கு கற்றுத் தரப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற அரசியல் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். உயர்கல்வி துறை செயலர் தா.கார்த்திகேயன் உடன் இருந்தார்.

‘விரைவில் துணை முதல்வர் ஆவார் உதயநிதி’

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது வாரிசு அரசியல் ஆகாது. திமுகவில் 10 சதவீதம் பேரின் வாரிசுகளுக்குதான் பதவி தரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 90 சதவீதம் பேர் உரிய விதிகளின்படி தேர்வாகியுள்ளனர். இந்த10 சதவீத வாரிசு அரசியல் அனைத்து கட்சிகளிலும் உள்ளது.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றினார்.

தற்போது தாமதமாகத்தான் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் இளைஞராக அவர் செயல்படுவார்.

மேலும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டாம் என திமுகவில் யாரும் கூறமாட்டார்கள். அவரது திறமைக்கு, விரைவில் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE