“தமிழகத்தை வஞ்சிக்கவே மதுரை எய்ம்ஸை தொடங்க மறுக்கிறீர்கள்” - மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “தமிழகத்தை வஞ்சிப்பதன் ஒரு பகுதியாக மதுரை எய்ம்ஸை நீங்கள் தொடங்க மறுக்கிறீர்கள்” என மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசமாக மத்திய அரசைக் குற்றம்சாட்டினார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கல் மீதான விவாதத்தில் சிபிஎம் கட்சியின் எம்பியான சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது: "மதுரை எய்ம்ஸ் பற்றி தொடர்ச்சியாக இந்த அவையில் நாங்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் எப்பொழுது கேள்வி எழுப்பினாலும் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்? என்கிற பதிலையே இந்த அவையிலே அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேற்றைய தினம் கூட அமைச்சர் 2026 அக்டோபரில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படுவதாகத் தெரிவித்தார். எங்களது கோரிக்கை எப்பொழுது கட்டி முடிப்பீர்கள் என்பதல்ல எப்பொழுது தொடங்குவீர்கள் என்பதையே நாங்கள் கேட்கிறோம். தொடங்காத ஒன்றை முடிக்கிற தொழில்நுட்பத்தை உலகத்தில் யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

எனவே, இப்பொழுதாவது இந்த அவையில் அமைச்சர் மதுரை எய்ம்ஸ் எப்பொழுது தொடங்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு திட்டத்தை தயவு செய்து தொடங்குங்கள் என்று எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் மன்றாடுகிறோம். ஆனால், தமிழகத்தை வஞ்சிப்பதன் ஒரு பகுதியாக மதுரை எய்ம்ஸை நீங்கள் தொடங்க மறுக்கிறீர்கள்.

அதேபோல சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை டிடி தொழிலாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தையும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான உதவித்தொகையை நிறுத்தி இருக்கிறீர்கள்.

ஒரு பக்கம் பெருநிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கிறீர்கள். வாரி கொடுப்பதை வசூல் செய்ய மறுக்கிறீர்கள். வசூல் செய்யாமல் வாரக்கடன் என்று அறிவிக்கிறீர்கள். பெருநிறுவனங்களுக்கு காட்டுகிற விசுவாசத்தை கல்விக்கு காட்டக் கூடாதா என்று நாங்கள் கேட்கிறோம். அதேபோல கிராம ஊராட்சிகளுக்கு நிதி வழங்குகிற “கிராமங்களுக்கான புதிய ஒப்பந்தம்” என்று பெயரை மாற்றி இந்தியிலே “கிராம் உதய், சே பாரத் உதய்” என்று பெயரை மாற்றி இருக்கிறீர்கள்.

தமிழகத்திலேயே ஒரு பழமொழி உண்டு. “பேரு வச்சியே சோறு வச்சியா?” என்று கேட்பார்கள். நீங்கள் சோறு வைக்காமல் பேரை மட்டும் மாற்றிவிட்டு ஏற்கெனவே இருக்கிற நிதியையும் குறைத்து இருக்கிறீர்கள். அதேபோல தொடர்ச்சியாக தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் வஞ்சிக்கப்படுகிறது. போதுமான நிதி மறுக்கப்படுகிறது. வடகிழக்கு ரயில்வேக்கு, வட இந்திய ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் நான்கில் ஒரு பகுதியை கூட தென்னக ரயில்வேக்கு ஒதுக்க மறுக்கிறீர்கள்.

இந்த விவாதத்துக்கு பிறகாவது தென்னக ரயில்வேக்கான நிதி அதிகப்படுத்தி தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு “திவ்யாங்” என்று சமஸ்கிருதத்திலே தெய்வக் குழந்தை என்று பெயர் வைத்தீர்கள். ஆனால் தெய்வக் குழந்தைங்களுக்கு கொடுத்த நிதியை இந்த பட்ஜெட்டில் 30 சதவீதம் குறைத்துள்ளீர்கள். மனிதர்களுக்கு நியாயம் வழங்காதது மட்டுமல்ல தெய்வங்களுக்கும் நீங்கள் நியாயம் வழங்க மாட்டீர்களா? என்று இந்த நேரத்திலே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே திருப்பூர் எம்பி குறிப்பிட்டதை போல திருப்பூர் ஜவுளி தொழில் மிகுந்த கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் பிணையில்லா கடன் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த நேரத்திலே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல மதுரை “நெய்பர்” தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள். இன்றைக்கு வரை அதற்கு நிதி ஒதுக்க மறுக்கிறீர்கள்.

ஏற்கெனவே ஒன்றிய அரசினுடைய அமைச்சரவை எடுத்த முடிவு; அமைச்சரவை எடுத்த முடிவை இன்றைக்கு வரை அரசு செயல்படுத்த மறுக்கிறது மதுரை நெய்பர் பணியை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். மதுரை விமான நிலையம், வாரம் முழுவதிலும் 24 மணி நேரமும் இயங்குவதற்கு, பாதுகாப்பு படைக்கான நிதியும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி க்கான பங்கீடை உரிய முறையில் வழங்க வேண்டும் என்பதையும் இந்த நேரத்திலே கேட்டு அமர்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE