ஏற்காட்டில் தொடரும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக கடும் பனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதின் காரணமாகவும், வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாகவும் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வந்தது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாக மழை விடாமல் பெய்து வருகிறது. மழை காரணமாக காற்றில் அதிகப்படியான ஈரப்பதம் ஏற்பட்டு, இரவு, பகல் நேரங்களில் குளுமையான காலநிலை நிலவி வருகிறது. மலைப் பிரதேசமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

இரவில் கடும் குளிருடன் பனிப்பொழிவால், ஏற்காடு மலை முழுவதும் மேகக்கூட்டங்கள் மிதந்து சென்று, பனிமூடி காட்சி தருகிறது. பகல் நேரங்களில் கூட பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு நகர பகுதியிலும், நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகுதியாக பனிமூட்டம் நிலவி வருகிறது. பனியுடன் கூடிய குளிரால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

ஏற்காடு முழுவதும் கடுமையான குளிரும், பனியும் இணைந்து சாலைகளை மறைத்து வருவதால், வாகன ஓட்டிகள் பகலிலும் முகப்பு விளக்கை எரியூட்டி சென்று வருகின்றனர். சாலைகளை அவ்வப்போது பனி மூடிவிடுவதால், வாகனங்களில் செல்பவர்கள், ஆங்காங்கே சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்து, பனி மூட்டம் சற்றே களைந்ததும், பயணத்தை தொடரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக ஏற்காட்டில் பெய்து வரும் அதிகளவிலான பனிப்பொழிவு காரணமாக அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா காட்சி பகுதிகளில் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக சாலையோரங்களில் கடை விரித்து வியாபாரம் செய்பவர்கள், பனி மூட்டத்தால் வியாபாரமின்றி, வருவாய் இழந்து தவிப்புக்கு உள்ளாகினர். பனி மூட்டம் காரணமாக ஏற்காடு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE