சென்னை: “எல்லோரும் அறிந்த வரலாற்றுப் பெருமைகளை திருத்தி எழுதவேண்டுமென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது ஓர் அரசியல் மோசடி” என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு செய்யப்பட வேண்டும், வரலாற்றில் அகிம்சை போராட்டம்தான் அதிக அளவில் பதிவாகியுள்ளது, ஆயுதப் போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை என்று உரையாற்றி வரலாற்று திரிபுவாதம் செய்திருக்கிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை பல்வேறு அறிஞர் பெருமக்கள் கடந்த காலங்களில் உரிய ஆவணங்களோடு பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அத்தகைய வெளியீடுகளை ஆர்.என்.ரவி படிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலூர் புரட்சியாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட புரட்சியாளர்களின் எழுச்சியாக இருந்தாலும் அவை அனைத்துமே கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் ஆர்.என்.ரவி அறிந்திருக்க நியாயமில்லை.
1857-இல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் பல நூல்களை எழுதி, ஆவண ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளனர். அவற்றை ஆங்கிலேயர்கள் 'சிப்பாய் கலகம்' என்று கூறியதை மறுத்து அதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று பதிவு செய்தார்கள். 1857இல் நடந்த ஆயுதமேந்திய எழுச்சிக்கு பிறகு தான் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி அகற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியின் ஆளுகைக்கு கீழ் இந்தியா வந்தது.
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
» முல்லைப் பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
அதையொட்டி, 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டு, இந்திய மக்களின் குறைகளை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு கோரிக்கையாக வைக்கிற நடைமுறை பின்பற்றப்பட்டது. விடுதலைப் போராட்ட தொடக்க காலத்தில் பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே ஆகியோரின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்தது. இந்நிலையில், 1915ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கத் தொடங்கியது முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட தொடங்கியது.
1920இல் அந்நிய துணி பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை இயக்கம், 1929இல் தண்டியில் உப்பு சத்தியாகிரகம், 1940இல் சட்ட மறுப்பு போராட்டம், இறுதியாக 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகியவற்றை இந்திய தேசிய காங்கிரஸ் நடத்தி 1947இல் இந்திய நாடு விடுதலை பெற்றது. இத்தகைய போராட்டங்களை காந்தியடிகள் தலைமையில் அகிம்சை, சத்தியாகிரக வழிமுறைகளின் மூலமாக 200 ஆண்டுகால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆட்சியிலிருந்து அகற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இத்தகைய விடுதலைப் போராட்டங்களில் இன்றைய பொதுவுடமை கட்சியினரும் பங்கேற்று சொல்லொணா துன்பங்களுக்கு ஆளானதை எவரும் மறந்திட இயலாது. எந்த விடுதலைப் போராட்டத்திலும் இன்றைய பா.ஜ.க.வின் தாய் ஸ்தாபனங்களான இந்து மகா சபையோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்போ கடுகளவு பங்களிப்பும் அளித்ததில்லை. மாறாக, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலையானதை ஆர்.என். ரவி உள்ளிட்ட எவராலும் மறுக்க இயலாது.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளாக, கைக்கூலிகளாக இருந்தவர்கள் தான் இன்றைய பா.ஜ.க.வின் மூதாதையர்கள். இத்தகைய கறைபடிந்த அத்தியாயத்தை பின்னணியாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வின் ஊதுகுழலாக இருக்கிற ஆர்.என்.ரவி, விடுதலைப் போராட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டுமென்று கூறுவது அப்பட்டமான ஒரு அரசியல் மோசடியாகும். வரலாறு என்பது வரலாறு தான். அதை யாரும், எவரும் திருத்தி எழுதி விட முடியாது. வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து திருத்தி எழுத எவர் முயன்றாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல், தமிழகத்தில் தந்தை பெரியார், திரு.வி.க., பெருந்தலைவர் காமராஜர், ஜீவா போன்ற எண்ணற்ற தலைவர்களின் கடும் சிறைவாச கொடுமைகளினால் தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதை பா.ஜ.க. மூடிமறைக்க முயன்றாலும், இந்திய மக்கள் அனைவரும் உண்மை வரலாற்றை அறிந்தே வைத்திருக்கிறார்கள். இத்தகைய வரலாற்றுப் பெருமைகளை ஆர்.என்.ரவி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயன்றால் அந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.
உண்மைக்கு எதிராக எவரும் வெற்றி பெற முடியாது. எனவே, ஆளுநராக நியமனம் செய்யப்பட்;டது முதல் ஒரு அரசியல்வாதியாக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்'' என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago