மதுரை | கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு கேக், பிஸ்கட் கண்காட்சி

By என்.சன்னாசி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழி சாலையிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனாவிலிருந்து மக்கள் மீண்டு வரவும், அமைதி, சகோதரத்துவம், மகிழ்ச்சி ஏற்படவும் இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழி சாலையிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. பேராயர் அதிசயம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னோட்ட நிகழ்வாக 18 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு நடத்தப்பட்ட பிராமாண்ட கேக் திருவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

முதன்மை சமையல்கலை நிபுணர் கோபி விருமாண்டி ஆலோசனைப்படி பள்ளி மாணவர்கள் ஐரோப்பிய பாரம்பரிய ஜிஞ்சர் ஹவுஸ் எனும் கேக் குடிலை தயாரித்தனர். ஜனவரி மாதம் வரை பொதுமக்கள் இதனை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் கேக், கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 27 வகையான கேக் வகைகளும், 18 வகையான குக்கிஸ்களும் (பிஸ்கட்) கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ''கடந்த 2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திய கரோனாவால் கொண்டாட்டங்கள் இன்றி இருந்தோம். இனிமேல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ சிறப்பு பிரார்தனையுடன் கிறிஸ்துமஸ் விழாவை தொடங்கியுள்ளோம். 2023ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமையவேண்டும்'' என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பால் அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE