'ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன்?' - நடிகர் சரத்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "எனக்கு ஓட்டு போடுங்கள் என்கிறேன். போடுகிறார்களா? அப்படி இருக்கும்போது ரம்மி விளையாடக் கூடாது என்று நான் சொன்னால் மட்டும் கேட்டு விடுவார்களா?" என்று நடிகர் சரத்குமார் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் சென்னையில் இன்று (டிச.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆன்லைனில் ரம்மி மட்டுமல்ல பல இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கிறார்; இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வருகின்றன. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்றுவது அரசின் வேலை.

என் கிரெடிட் கார்டில் 10 லட்சம் ரூபாய்தான் லிமிட். அதற்கு மேல் உள்ள தொகைக்கு என்னால் விளையாட முடியாது. அதுபோலதான் அனைவருக்கும் விதி இருக்கிறது. ஆனால் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்களைக் கூட ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட திறமை அவசியம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்கள்கூட சூதாட்டம் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நான் சொன்னால் மக்கள் கேட்டுவிடுவார்களா? எனக்கு ஓட்டு போடுங்கள் என்கிறேன், போடுகிறார்களா? ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்கிறேன், ஆனால் வாங்குகிறார்களே. அப்படி இருக்கும்போது ரம்மி விளையாடக் கூடாது என்று நான் சொன்னால் மட்டும் கேட்டு விடுவார்களா?

நான் 2 ஆண்டுகளுக்கு முன் ரம்மி விளம்பரத்தில் நடித்தபோது ஆன்லைன் ரம்மிக்கு தடைச் சட்டம் இல்லை. அதற்குப் பிறகுதான் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஒருவேளை அவசரச் சட்டம் அப்போது பிறப்பிக்கப்பட்டிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். அமைச்சர் ரகுபதியிடம் அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென நான் வலியுறுத்தி உள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE