அழிந்து வரும் நிலையில் உள்ள 350-க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகை களை பாதுகாக்கும் முயற்சியாக, வீடுகள்தோறும் ஒரு மூலிகை தோட்டம் அமைக்க கன்னியாகுமரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆரோக்கிய திட்ட முயற்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், தென்னிந்தியா முழுவதும் 1,200 சித்த மருத்துவர்களால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதயநோய்க்கு நிவாரணம் அளிக்கும் ஜீரக நாரியில் இருந்து, கடும் உடல்வடுக்களை ஆற்றும் வெட்டுக்காயபூரம் வரையிலான நூற்றுக்கணக்கான மூலிகைகளை இன்று பார்ப்பதே அரிதாக உள்ளது. சித்தர்கள், பாரம்பரிய வைத்தியர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த மூலிகைகளின் பெயர்கள்கூட இளைய தலைமுறையினர் அறியமுடியாத நிலைக்கு சென்றுவிட்டது.
இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையாக வீட்டுக்கு ஒரு மூலிகை தோட்டம் அமைக்க, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையினர் மூலம், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா பயிற்சி அளித்து வருகிறது. இச்சேவையை பாராட்டி மத்திய அரசு 2007-ல் பூமிஜல் புரஸ்கார் விருதை, விவேகானந்தா கேந்திராவுக்கு வழங்கியது.
1,200 மருத்துவர்கள்
இதுபோல், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் 1,200-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் மூலம் வீடுகள்தோறும் மூலிகைத் தோட்டம் அமைத்து, மூலிகைகளை பாதுகாக்கும் வகையில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதை போன்று, வீட்டுக்கு ஒரு மூலிகை தோட்டம் அமைக்க வேண்டுமென மத்திய அரசின் ஆரோக்கிய திட்டத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
நெல்லை மருத்துவர்
மூலிகைதோட்டம் அமைப்பதற்கு திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த சித்த மருத்துவர் வே.கணபதி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் முகாமிட்டு இலவச பயிற்சி அளித்து வருகிறார். `தி இந்து’விடம் அவர் கூறியது:
அழிந்துவரும் மூலிகைகளில் பட்டியலில், மருந்துவாழ் மலையில் மட்டுமே கிடைக்கும் ஜீரகநாரி, எருமைகங்குளி போன்ற 350 வகை மூலிகைகள் உள்ளன. இவற்றை வீடுகளில் உள்ள சிறிய இடத்திலேயே வளர்க்கலாம். சாதாரண காய்ச்சலில் இருந்து கொடியநோய்கள் வரையிலான பிரச்சினைகளுக்கு இந்த மூலிகை இலைகளை பயன்படுத்தினாலே நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
80 ஆயிரம் வீடுகளில்..
இவற்றை அழியாமல் பாதுகாக்கும் வகையில் கேந்திராவில் 26 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி மேற் கொண்டு வருகிறோம். இதற்காக மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பதுறை திட்ட பயிற்சிகளின் செயலாளர் வாசுதேவ் இங்கேயே தங்கியிருந்து, கிராமங்கள் தோறும் மூலிகை செடிகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக எங்களிடம் பயிற்சிபெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர்.
காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு, துளசி, சோற்று கற்றாழை போன்றவற்றை வீட்டில் வளர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதுதவிர தூதுவளை, அமுக்ரா, கீழாநெல்லி, வெட்டிவேர், செம்பருத்தி, புங்கு, புன்னை, ஆடாதோடா, ஆமணக்கு ஆகியவையும், தொழுநோய் போன்ற தோல் புண்களை குணமடையச் செய்யும் கருஓமத்தை, சளி, ஜலதோஷம் போன்ற தலை சம்பந்தப்பட்ட நோய்களை சீராக்கும் நீலநொச்சி, கருநொச்சி, நாள்பட்ட வயிற்று புண்களை குணப்படுத்தும் சிவப்புநிற சோற்றுக்கற்றாழை, பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்தும் அசோகமரம், ஆஸ்துமாவை குணமாக்கும் வெள்ளை எருக்கு, நரம்பு தொடர்பான உபாதைகளை சீர்செய்யும் 9 இலைகொண்ட சிவலிங்க வில்வம் என பாதுகாக்கப்பட வேண்டிய மூலிகைகள் நிறைந்துள்ளன.
இவற்றை வீட்டில் இடம் இல்லாதவர்கள் சாதாரண தொட்டிகளில் அழகுசெடிகள் போன்று வீட்டில் வளர்ப்பதற்கு, இங்கு சுற்றுலாவருவோரை அழைத்து பயிற்சி அளிக்கிறோம். எங்கள் இணைய தளங்களிலும், மூலிகைகளை வளர்ப்பது குறித்த சந்தேகங்களை பலர் கேட்டறிகின்றனர்.
இதன்விளைவாக ஆடாதோடாவை குமரி மாவட்டத்தில் தென்னை மரத்தோப்புகளில் ஊடுபயிராக விவசாயிகள் நட்டுள்ளனர். இது சிறந்த கொசுவிரட்டியாகவும் பயன்பட்டு வருகிறது. பணகுடி, கீரிப்பாறை, தாழாக்குடி ஆகிய கிராமப்பகுதிகளில் மூலிகை பண்ணை அமைத்து அப்பகுதி மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வனத்துறையினரும், மலைவாழ் மக்களும் உதவிபுரிகின்றனர். வீட்டுக்கொரு மூலிகை தோட்டம் திட்டத்தை கட்டாயமாக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago